Oct 20, 2024 - 11:22 AM -
0
இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2 ஆவது நாள் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 46 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ஓட்டங்களை குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ஓட்டங்களையும், கான்வே 91 ஓட்டங்களையும், டிம் சவுதி 65 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதையடுத்து, 366 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், 2 ஆவது இன்னிங்சை ஆரம்பித்த இந்தியா. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 231 ஓட்டங்களை பெற்றது. சர்பராஸ் கான் ஆட்டமிழக்கமால் 70 ஓட்டங்களை பெற்றார்.
நான்காம் நாள் ஆட்டத்தின் போது சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி நிதானமாக ஆடி ஓட்டங்களை பெற்றனர். சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் 150 ஓட்டங்களிலும், ரிஷப் பண்ட் 99 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், இந்த போட்டியின் போது எம்.எஸ்.டோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட் 62 இன்னிங்சில் 2,500 ஓட்டங்களை கடந்துள்ளார்.
இதற்குமுன் எம்.எஸ்.டோனி 69 இன்னிங்சில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளார்.