Jun 5, 2025 - 03:17 PM -
0
ஆசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் (ASBC) ஆசிய U22 மற்றும் இளைஞர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் 2025 போட்டிகள், SLT-MOBITEL, PEO SPORTS மற்றும் இலங்கை குத்துச்சண்டை சம்மேளனம் (BASL) ஆகியவற்றின் வலுவூட்டலில் அண்மையில் வெற்றிகரமாக முடிந்திருந்தன. இலங்கையின் குத்துச்சண்டை சமூகத்துக்கு இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக அமைந்திருந்தது. மே மாதம் 12 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு சுகததாஸ உள்ளக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 24 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான பங்குபற்றுனர்கள் பங்கேற்றிருந்தனர்.
BASL, ASBC மற்றும் சர்வசேத குத்துச்சண்டை சம்மேளனம் (IBA) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் போட்டிகளுக்கு SLT-MOBITEL FTTH Broadband மற்றும் PEO-SPORTS/PEOTV ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன. 57 வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஆசிய குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றதுடன், தேசத்துக்கு பெருமையையும் ஏற்படுத்தியிருந்தது.
இறுதிப் போட்டியைக் கண்டுகளிக்க பெருமளவான ரசிகர்கள் மைதானத்தில் நிரம்பியிருந்ததுடன், நேரடியாக கண்டுகளிக்க ஆயிரக் கணக்கானவர்கள் ஒன்றுகூடியிருந்தனர். ஆண், பெண் இருபாலாரின் மொத்தமாக 33 இலங்கை வீரர்கள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தனர்.
PEO SPORTS 1 (HD - CH. 323, SD - CH. 150) இல் True HD தரத்தில் அனைத்துப் போட்டிகளும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. நாடு முழுவதையும் சேர்ந்த குத்துச்சண்டை ரசிகர்களுக்கு விறுவிறுப்பான கண்டுகளிப்பு அனுபவத்தை வழங்கியிருந்தது. மேலும், PEO MOBILE App ஊடாக நேரலையாக ஸ்ட்ரீம் செய்து பார்வையாளர்கள் இந்தப் போட்டிகளைக் கண்டுகளித்ததுடன், PEO SPORTS Facebook page மற்றும் YouTube live streams போன்றவற்றினூடாக உலகளாவிய ரீதியிலும் இந்தப் போட்டிகளை கண்டுகளிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. நேரலை ஸ்ட்ரீமிங் ஊடாக 27 மில்லியன் பார்வைகளை எய்தியிருந்ததுடன், இக்காலப்பகுதியில் 25 மில்லியன் ரசிகர்களை சென்றடைந்திருந்தது.
பார்வையாளர்களின் வரவேற்பு தொடர்பில் SLT-MOBITEL PEOTV பிரதம அதிகாரி ருச்சிர வீரகோன் கருத்துத் தெரிவிக்கையில், “இது போன்ற உயர்ந்த சர்வதேச நிகழ்வொன்றை வெற்றிகரமாக நிர்வகிப்பது என்பது PEOTV ஐச் சேர்ந்த எமக்கு பெருமைக்குரிய சாதனையாக அமைந்துள்ளது. ஏனெனில், அதனூடாக சர்வதேச நியமங்களுக்கமைய ஒளிபரப்பு செய்யும் எமது எமது ஆற்றலை வெளிப்படுத்த முடிந்தது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுக்க பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
இலங்கை குத்துச் சண்டைக்கு மாத்திரமன்றி, PEOTV க்கும் இந்த சம்பியன்ஷிப் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்திருந்தது. PEO SPORTS இனால் ஒளிபரப்பு மற்றும் நிகழ்வின் முழு வீடியோ தயாரிப்பும் SLT-MOBITEL இன் அதிவேக Fibre Broadband இணைய வசதியினூடாக நிர்வகிக்கப்பட்டிருந்தது.
சம்பியன்ஷிப்பின் முக்கிய அம்சங்கள்:
* கஸகஸ்தானின் எலினா, தமது நாட்டின் சார்பாக பங்கேற்று, சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமைக்காக, போட்டித் தொடரின் சிறந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார். கிர்கிஸ்தானின் மிர்சகீர் சிறந்த ஆண் குத்துச்சண்டை வீரராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
* சிறந்த பெண்கள் குத்துச் சண்டை அணிக்கான விருதை கஸகஸ்தான் அணி பெற்றுக் கொண்டதுடன், கிரிகிஸ்தான் அணி, சிறந்த ஆண்கள் குத்துச் சண்டை அணியாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
* இலங்கையின் மொஹமட் யஸ்மின் உசைத், இறுதிப் போட்டிக்கு தகைமை பெற்றதுடன், 22 வயதுக்குட்பட்ட ஆண்கள் 75kg பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை நிகழ்வின் விசேட அம்சமாக அமைந்திருந்தது.