Jun 5, 2025 - 04:28 PM -
0
ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய அபிவிருத்தி கடன் வழங்கல் நிறுவனங்களின் சங்கத்தின் (Association of Development Financing Institutions in Asia and the Pacific - ADFIAP) ஸ்தாபக உறுப்பினரான DFCC வங்கி பிஎல்சி, 2025 ஏப்ரல் 23 முதல் 25 வரை ஓமான் நாட்டின் மஸ்கட் மாநகரில் இடம்பெற்ற 48 வது ADFIAP வருடாந்த கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி, மனித மூலதன மேம்பாடு, மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவற்றில் தலைமைத்துவத்தைக் காண்பித்துள்ளமைக்குப் புறம்பாக, 49 வது ADFIAP வருடாந்த கூட்டத்தை DFCC வங்கி நடாத்தவுள்ளமை குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இது 2026 ம் ஆண்டு, இலங்கையின் கொழும்பு மாநகரில் இடம்பெறவுள்ளது.
நிலைபேற்றியல் சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு கடன் வசதியளிக்கின்ற அபிவிருத்தி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் முதன்மை பிராந்திய அமைப்பாக ADFIAP திகழ்ந்து வருகின்றது. இது 1976 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டதுடன், தற்போது 45 நாடுகள் மத்தியிலிருந்து 131 உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. உட்கட்டமைப்பு, காலநிலை மாற்றம் சார்ந்த கடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை அபிவிருத்தி, மற்றும் நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைத்தல் போன்ற விடயங்களில் ஒத்துழைப்பு, அறிவுப் பரிமாற்றம், மற்றும் கொள்கை வகுப்பு தலைமைத்துவம் ஆகியவற்றை ADFIAP ஊக்குவிக்கின்றது. சர்வதேச மேடைகளில் அங்கீகரிக்கப்பட்ட குரலாக இது ஒலித்து வருவதுடன், பலதரப்பு முகவர் நிறுவனங்கள், ஐநா அமைப்புக்கள், மற்றும் பிராந்திய பொருளாதார மேடைகள் போன்ற தரப்புக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகின்றது.
2025 வருடாந்த கூட்டத்தில் 97 உறுப்பு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்திக் கடன் கூட்டாளர்கள் மத்தியிலிருந்து 97 தலைவர்கள் ஒன்றுகூடினர். DFCC வங்கியின் சார்பில் கொண்ட குழுவில் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்களும், ஏனைய சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். “Enabling the Shift: How a Cost-Efficient Core Banking System Lays the Groundwork for AI and Data-Driven Digital Transformation” எனும் தலைப்பில் DFCC வங்கியின் பங்களிப்புக்கள் குறித்த விரிவான படைப்பாக்க விளக்கத்தை விந்திய சொலங்காராச்சி அவர்கள் இந்நிகழ்வில் வழங்கினார். டிஜிட்டல் வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் புத்தாக்கம் மற்றும் செலவுகளை திறன்மிக்க முறையில் நிர்வகிப்பது ஆகிய இரண்டையும் சமமாக கையாள்வதில் வங்கி எவ்வாறு மேம்படுத்தக்கூடிய உட்கட்டமைப்பை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது என்பதை இந்த அமர்வு வெளிக்காண்பித்தது.
பிராந்தியத்திற்கு ஏற்புடைய மற்றுமொரு விடயத்தையும் சேர்த்துக்கொள்ளும் வகையில், DFCC வங்கியின் நிதியியல் தொழில்நுட்ப துணை நிறுவனமான Synapsys ஆனது இச்சங்கத்தின் தொழில்நுட்பப் பிரிவான ADFIAPNet உடன் மூலோபாய கூட்டாண்மையொன்றையும் உத்தியோகபூர்வமாக ஏற்படுத்திக் கொண்டுள்ளது.
பாரம்பரியமாக உபயோகித்து வந்துள்ள வங்கி கட்டமைப்புக்களை தரமுயர்த்திக் கொள்வதில் உறுப்பு நிறுவனங்களுக்கு உதவுவதே இதன் நோக்கம். இலங்கையில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் Land Bank வங்கியானது தன்னுடன் இணைந்த சங்கங்களின் பயன்பாட்டிற்காக Synapsys ன் ABANX தளத்தை உள்வாங்கிக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திட்டுள்ளது.
2025 கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக, 49 வது ADFIAP வருடாந்த கூட்டத்தை 2026 ல் கொழும்பில் நடாத்தும் பொறுப்பு DFCC வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த பாரிய பிராந்திய நிகழ்வானது சர்வதேச அபிவிருத்தி நிதித் தலைவர்களை இலங்கைக்கு ஈர்க்கவுள்ளதுடன், நாட்டில் பரிமாண வளர்ச்சி கண்டு வருகின்ற நிதித் துறை மற்றும் DFCC வங்கியின் தலைமைத்துவம் ஆகியவற்றையும் எடுத்துக்காட்டுகின்றது.
ADFIAP மிகச் சிறந்த அபிவிருத்திச் செயற்திட்ட விருதுகளின் கீழ் மனித மூலதன அபிவிருத்திக்காக சிறப்புத்தகுதி விருது வழங்கி DFCC வங்கி கௌரவிக்கப்பட்டது. DFCC வங்கியின் சூழல், சமூக மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் (ESG) அடிப்படையிலான 6E க்கள் கொண்ட நிலைபேற்றியல் வேலைத்திட்டத்தின் ‘உடற்பயிற்சி’ (Exercise) என்ற பிரிவுடன் ஒன்றும் வகையில் வங்கியால் முன்னெடுக்கப்படும் உள்வாரி உடல்நலன் முயற்சியான OMMM Committee க்கான அங்கீகாரமாகவே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. குழுவாக சைக்கிளோட்டம் செய்தல், ஸும்பா உடற்பயிற்சி அமர்வுகள், ஊட்டச்சத்து குறித்த செயலமர்வுகள், மற்றும் உள ஆரோக்கிய நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற செயற்பாடுகள் ஆரோக்கியமான, இன்னும் கூடுதல் ஈடுபாடு கொண்ட ஆளணியை வளர்ப்பதற்கு உதவியுள்ளன.
புத்தாக்கம், பணியாளர் திறன்களை மேம்படுத்தல், மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கள் ஆகியவற்றைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் DFCC வங்கி, இலங்கையிலும், பிராந்தியத்தின் மத்தியிலும் அனைவரையும் அரவணைக்கும் மற்றும் நிலைபேற்றியல் வளர்ச்சியில் அர்ப்பணிப்புடன், குறித்த நோக்கத்தை இலக்காகக் கொண்டு முன்செல்லும் நிதி நிறுவனம் என்ற தனது வகிபாகத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.