Jun 14, 2025 - 07:28 AM -
0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ஓட்டங்களை பெற்றது.
தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில்138 ஓட்டங்களில் சுருண்டது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
அவுஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, அவுஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 75 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது அவுஸ்திரேலியா. 8 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது.
இந்த ஜோடி 61 ஓட்டங்களை எடுத்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ஓட்டங்களில் அவுட்டானார்.
இரண்டாம் நாள் முடிவில் அவுஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்களை எடுத்து, 218 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (13) நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா 2 ஆவது இன்னிங்சில் 207 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 282 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ஓட்டங்களிலும், வியான் முல்டர் 27 ஓட்டங்களிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு அணி தலைவர் பவுமா அரை சதம் கடந்தார்.
3 ஆவது விக்கெட்டுக்கு மார்கிரம் - பவுமா ஜோடி 143 ஓட்டங்களை சேர்த்துள்ளது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்களை எடுத்துள்ளது. மார்கிரம் 102 ஓட்டங்களுடனும், பவுமா 65 ஓட்டங்களுடம் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 69 ஓட்டங்கள் தேவை. அவுஸ்திரேலியா வெற்றி 8 விக்கெட் தேவை என்பதால் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.