Jun 15, 2025 - 08:44 AM -
0
ஈரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய தெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்பு தளங்களை குறிவைத்து இஸ்ரேல் மீண்டும் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த இலக்குகளில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சின் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை அடங்கும் என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய தாக்குதல்களில் தலைநகரில் உள்ள ஷஹ்ரான் எண்ணெய் கிடங்கு சேதமடைந்ததாக தெஹ்ரானின் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, இஸ்ரேலை குறிவைத்து ஈரான் புதிய ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தனது பாதுகாப்பு அமைச்சரவையை கூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் ஈரானிடமிருந்து மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ளும் நிலையில், நெதன்யாகு பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால், ஈரானிய தாக்குதல்கள் தீவிரமடையும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது.
அதேநேரம் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 8 பேர் உயிரிழந்ததுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் 35 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதுடன் நுாற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.