வடக்கு
93 ஆவது வயதில் கால் பதிக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரி

Jun 15, 2025 - 07:21 PM -

0

93 ஆவது வயதில் கால் பதிக்கும் வீரசிங்கம் ஆனந்தசங்கரி

மூத்த தமிழ் அரசியல்வாதியான வீரசிங்கம் ஆனந்தசங்கரி 93 ஆவது வயதில் இன்று (15) கால் பதிக்கின்றார்.

 

1933 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்த ஆனந்தசங்கரி ஆரம்ப கல்வியை அச்சுவேலி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை பருத்தித்துறை காட்லி கல்லூரியிலும் பயின்றதுடன் உயர்கல்வியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் பயின்றார்.

 

தொடர்ந்து கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றதுடன் ஆசிரியராகவும் சேவையாற்றினார். ஜாயல ருடல  கிறிஸ்தவ கல்லூரியில் ஆசிரியர் சேவையை ஆரம்பித்த ஆனந்தசங்கரி தொடர்ந்து இரத்மலானை கொத்தலாவல பாடசாலையிலும், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும், பூநகரி மகாவித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலையில் ஆங்கில பாட ஆசிரியராக சேவையாற்றினார்.

 

இலங்கையில் மூத்த தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்தசங்கரி தமிழ் அரசியலில் முக்கிய பங்கினை வகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

1955 ஆம் ஆண்டு லங்கா சமசமாச கட்சியில் இணைந்ததுடன், அக்கட்சி சார்பில் கொழும்பு மாநகர சபையில் போட்டியிட்டு அரசியலுக்குள் பிரவேசித்தார். தொடர்ந்து அதே கட்சி சார்பில் 1960 ஆம் ஆண்டு கிளிநொச்சி தொகுதியை மையப்படுத்தி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சி கிராம சபை தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியானதுடன், கிராம சபைத் தலைவரானார்.

 

1966 மே மாதத்தில் அகில இலங்கைத் தமிழக் காங்கிரசுடன் இணைந்தார்.1968 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி பட்டின சபையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

1970 இல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரானா ஆனந்தசங்கரி, 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆலாலசுந்தரத்தை 657 வாக்குகளால் தோற்கடித்து பாராளுமன்றம் சென்றார்.

 

இலங்கை அரசியல் வட்டத்தில் தமிழ்த் தேசிய பயணத்தின் ஊடாக தமிழ் மக்களிற்கான அரசியல் உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் தமிழ்த் தேசிய அரசியல் பயணத்தை ஆரம்பித்த வீ.ஆனந்தசங்கரி இளைஞர்களை ஒன்று திரட்டி செயற்பட்டார்.

 

நாட்டில் ஏற்பட்ட அரசியல் சூழலை கருத்தில் கொண்டு மூத்த தமிழ் அரசியல் தலைவர்களான தந்தை செல்வா, ஜீ ஜீ பொன்னம்பலம், சௌ.தொண்டமான் ஆகியோரின் இணைவுக்கான முயற்சிகள் இடம்பெறும்போது அதற்கு பலம் சேர்த்தார் ஆனந்தசங்கரி.

 

1972 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஒரே குடையின் கீழ் கூடிய அப்போதைய தமிழ் அரசியல் தலைவர்களுடன் ஒருமைப்பாட்டுக்காக உழைத்த ஆனந்தசங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தில் பங்காற்றினார். அத்துடன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது பிரச்சாரச் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட ஆனந்தசங்கரி பெருந் தலைவர்களுடன் இணைந்து தமிழ் அரசியலில் முக்கிய பங்காற்றினார்.

 

1977 நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அன்றைய இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சி. குமாரசூரியரை 11,601 வாக்குகளால் தோற்கடித்தார்.

 

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரிப்பதில்லை என பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு ஜீலை வன்முறைகளில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் பாராளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள்.

 

மூன்று மாதங்கள் பாராளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வீரசிங்கம் ஆனந்தசங்கரி பாராளுமன்ற இருக்கைகளை இழந்தார். ஆறாம் திருத்தச் சட்டத்துக்கு அமைய சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததை அடுத்து வழக்கறிஞராகப் பணியாற்றும் உரிமையும் இவருக்கு மறுக்கப்பட்டது.

 

பெரும் தலைவர்களின் மறைவின் பின்னர் கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இருந்ததுடன், 2002 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக பொறுப்புக்களை ஏற்று கட்சியை வழிநடத்தி வந்தார்.

 

அக்காலப்பகுதியில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு தலைமை ஏற்று செயற்பட்ட ஆனந்தசங்கரி, உட்கட்சி முரண்பாடுகளால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்.

 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபக காலம் முதல் இன்று வரை அக்கட்சியினை பாதுகாப்பதிலும், அரசியலிலும் ஈடுபட்டு வந்த ஆனந்தசங்கரி தனது 93 ஆவது வயதிலும் தொடர்ந்தும் அரசியல் பயணத்தை முன்னெடுத்து வருகின்றார்.

 

ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தினால் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தன்னை காந்திய வழியில் அகிம்சை போராளியாக அரசியலில் வலம் வரும் ஆனந்தசங்கரி தனது முதிர் வயதிலும் தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு வகையிலும் முயற்சித்தே வருகின்றார்.

 

ஜீலை கலவரத்தினால் பாதிக்கப்பட்டு வடக்கு நோக்கி வந்த மக்களை அரவணைத்து, கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை உருவாக்கி அவர்களை குடியமர்த்த இளைஞர் அணிக்கு வழிகாட்டியாகவும் இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இன்றைய அரசியல் சூழலில் தன்னால் பாதுகாத்து வரப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கத்தை உணர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள் ஒருமைப்பாட்டுக்குள் ஒரே கட்சியின் கீழ் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்பினையும் அவர் விடுக்கத் தவறவில்லை.

 

இன்று தனது 93ஆவது வயதில் முதிர்ந்த அரசியல்வாதியாக காலடிவைக்கும் ஆனந்தசங்கரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் அரசியல் சூழலில் மீண்டும் ஒருநிலையுடனான பயணத்துக்குள் கடந்து செல்ல தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும் என்பதே ஆனந்தசங்கரியின் விருப்பமுமாகும்.

 

தனது காலத்தில் அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் மக்களிற்கு பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே இவரது முதிர்நத அரசியல் சிந்தனை, செயற்பாடுகளில் காண முடிகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05