Jun 15, 2025 - 08:11 PM -
0
தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்க தமிழரசுக் கட்சி முன்வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பல்லாண்டு கால பகைமையை மறந்து ஜீ ஜீ பொன்னம்பலம், தந்தை செல்வா இணைந்தே தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினர். தமிழ் மக்களின் நலன் கருதி எதிரும் புதிருமாக இருந்த தலைவர்கள் காலத்தின் தேவையை உணர்ந்து ஒன்றாகியே இக்கட்சியை உருவாக்கினர்.
அந்த பெரியார்களின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் செயலாளர் நாயகமாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவர்களின் ஆசீர்வாதம் எனக்கு இருந்தது. தந்தை செல்வா தனது மரணத்துக்கு முன்னர் என்னுடன் பயணித்தார்.
அவருக்கு விழுந்த மாலையிலிருந்து பூக்களை பிடுங்கி எனது தலையில் எறிந்து ஆசீர்வதித்ததை நான் நன்கு உணருகின்றேன். அந்த பயணத்தின் பின்னர் ஒரு சில நாட்களில் அவர் உயிர் பிரந்தார். அவரது ஆசீர்வாதம் மட்டுமல்ல, ஜீ ஜீ பொன்னம்பலம் அவர்களின் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்தது.
அந்த பெரியார்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இணைந்து ஒற்றுமையாக செயற்படுமாறே நான் அழைக்கின்றேன். மக்களின் இன்றைய அரசியல் நிலைமையில் ஒருமைப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது.
தமிழரசுக் கட்சியினர் மீண்டும் எம்முடன் இணைந்து பயணிக்க வேண்டும். சுமந்திரனுக்கு இந்த அழைப்பை நான் விடுக்கின்றேன். தமிழர் விடுதலைக் கூட்டணியில் மீண்டும் இணைவதன் மூலம் நன்மையான விடயங்களை பெற முடியும்.
இந்திய அரசியலமைப்பு முறையிலான தீர்வையே நான் வலியுறுத்தி வருகின்றேன். சிங்கள, இஸ்லாமிய மக்களும் அதனை வரவேற்றனர். அந்த தீர்வுத் திட்டத்திற்காக நாம் தொடர்ந்தும் முயற்சித்து வெற்றி பெற முடியும். அதற்கான காலம் மீண்டும் உருவாகியுள்ளது. அதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.
இன்று பதவிக்காக அலைகின்றனர். பதவிகளுக்காக கூட்டுச் சேருகின்றனர். நான் பதவிக்கு ஆசைப்பட்டதில்லை. பதிவிக்காக அலைந்தது இல்லை. அவ்வாறு பதவிக்கு அலைந்திருந்தால் இன்று 30 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்தும் இருந்திருப்பேன்.
இன்றைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அனைவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து செயற்பட முன்வர வேணடும் என அழைப்பு விடுக்கின்றேன் என தெரிவித்தார்.
--