Jun 16, 2025 - 11:50 AM -
0
வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா மாநகர சபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (16) காலை நடைபெற்றது.
இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதனடிப்படையில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து பிரதி முதல்வருக்கான தெரிவு இடம்பெற்றது. பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் அவர்களுக்கு 10 வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதி முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.
ஆளும் கட்சி சார்பில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தேசிய கூட்டணி என்பன இணைந்து ஆட்சி அமைத்துள்ளன.
--