உலகம்
இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்…? ஈரான் சொன்ன பகீர் தகவல்

Jun 16, 2025 - 04:41 PM -

0

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும்…? ஈரான் சொன்ன பகீர் தகவல்

ஈரானுக்காக இஸ்ரேல் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் சொல்லியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. 

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் இராணுவம் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

இதில், பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் வழிமறித்து அழிக்கப்பட்டன. எனினும், ஒரு சில ஏவுகணைகள் இஸ்ரேல் மீது விழுந்து வெடித்துச் சிதறின. இதனால், இஸ்ரேலின் டெல் அவிவ், ஜெருசலம், பாட் யாம் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் உருக்குலைந்தன. 

இரு நாடுகளிடையே தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், நேற்றிரவு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 

ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் லேசாக சேதமடைந்தது. இதையடுத்து, தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளும் தங்கள் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த அதிகாரி மற்றும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரான ஜெனரல் மொஹ்சென் ரெசா, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார். 

ஈரான் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த ஜெனரல் மொஹ்சென் ரெசா, “இஸ்ரேல் எங்கள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் எங்களுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இதனால், தற்போது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச பிரச்சார அமைப்பு (ICAN)-ன் தரவின் படி, உலகளவில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அடங்கும். இந்நிலையில், ஈரானிற்காக, இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என ஈரான் ஜெனரல் மொஹ்சென் ரெசா அளித்திருக்கும் பேட்டி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் இதனை உடனடியாக மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Comments
0

MOST READ