Jun 16, 2025 - 05:33 PM -
0
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த சுதர்சன சாமர வீரக்கோன் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பிரதி தவிசாளராக ஜக்கிய மக்கள் சக்தியின் குணபால சரத்மது ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், பிரதேச சபை மண்டபத்தில் இன்று (16) மாலை நடைபெற்றது.
இதன்போது தவிசாளர் தெரிவுக்கு இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி சார்பில் சுதர்சன சாமர வீரக்கோன், மற்றும் சுயேட்சைகுழு சார்பில் கசுன் சுமதிபால ஆகியவர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டது.
இதன்போது குறித்த தெரிவினை இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நடாத்துமாறு 10 பேரும், திறந்த வாக்கெடுப்பு நடாத்துமாறு 7 பேரும் கோரினர்.
பெரும்பான்மை அடிப்படையில் தவிசாளர் தெரிவுகள் இரகசிய வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது.
வாக்களிப்பு முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினருக்கு 12 வாக்குகள் கிடைக்கப்பெற்றது. சுயேட்சை உறுப்பினருக்கு 5 வாக்குகள் கிடைக்கப்பெற்றது.
தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர் சுதர்சன சாமர வீரக்கோன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உப தவிசாளராக ஜக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குணபால சரத்மது வின் பெயர் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டது.
வேறு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாமையினால் போட்டியின்றி அவர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
--