செய்திகள்
தமிழ் அரசுக் கட்சி வசமான வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை!

Jun 17, 2025 - 08:48 PM -

0

தமிழ் அரசுக் கட்சி வசமான வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை!

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குமாரசாமி சுரேந்திரன் தெரிவானார். 

வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 

32 உறுப்பினர்களை கொண்ட வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 4 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியது. 

தவிசாளரை தெரிவு செய்வது பகிரங்க வாக்கெடுப்பா? அல்லது இரகசிய வாக்கெடுப்பா? என உள்ளூராட்சி ஆணையாளரால் கோரப்பட்டபோது இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியன பகிரங்க வாக்கெடுப்பையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி ஆகியன இரகசிய வாக்கெடுப்பையும் கோரின. 

இதன்படி இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

தேசிய மக்கள் சக்தி வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார். 

32 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்றதுடன் 7 பேர் பங்கேற்கவில்லை. 

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட குமாரசாமி சுரேந்திரன் 13 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தம்பையா சிவராசா 12 வாக்குகளையும் பெற்றனர். 

இதனடிப்படையில் தவிசாளராக குமாரசாமி சுரேந்திரன் தெரிவாகினர். 

பின்னர் உப தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது. இதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தியாகராசா தயாபரன் 14 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கந்தன் பரஞ்சோதி 11 வாக்குகளையும் பெற்றனர். 

இறுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தியாகராசா தயாபரன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05