பல்சுவை
பல்கலைக்கழக மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு

Jul 14, 2025 - 11:46 AM -

0

பல்கலைக்கழக மாணவி ஆற்றில் சடலமாக மீட்பு

இந்தியாவின் திரிபுராவை சேர்ந்தவர் சினேகா தேப்நாத் (வயது 19). இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.

 

இதற்காக தெற்கு டெல்லியில் உள்ள பர்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7 ஆம் திகதி திடீரென மாயமானார். அவர் அன்றைய தினம் காலையில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி உள்ளார். அப்போது அருகே உள்ள ரயில் நிலையத்துக்கு செல்வதாக தெரிவித்துள்ளார்.

 

அதன்பிறகு வெகுநேர மாகியும் அவர் அறைக்கு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவரது தொலைபேசி சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

 

இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் புகார் செய்தனர். பொலிஸார் நடத்திய விசாரணையில் சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கி விட்டதாக ஒரு கார் டிரைவர் கூறினார். அதேபோல் அந்த பாலத்தின் அருகே ஒரு பெண் நின்று கொண்டிருந்ததாகவும், பின்னர் அந்த இடத்தில் இருந்து காணாமல் போனதாகவும் சிலர் கூறி இருந்தனர்.

 

இதையடுத்து நிகம்போத் காட் பகுதி முதல் நொய்டா வரையிலும் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் உள்ளூர் பொலிஸார் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது.

 

இந்த நிலையில் கீதா காலனி மேம்பாலம் அருகே யமுனை ஆற்றில் ஒரு பெண் சடலமாக மிதப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே பொலிஸார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது 6 நாட்களுக்கு முன்பு மாயமான சினேகாவாக இருக்கலாம் என கருதிய பொலிஸார் அவரது குடும்பத்தினரை சம்பவ இடத்துக்கு வரவழைத்தனர்.

 

அவர்கள் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டது சினேகா என்பதை உறுதிபடுத்தினர். இதைத்தொடர்ந்து சினேகா உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

இதுகுறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,

 

சினேகா தேப்நாத் தற்கொலை செய்து கொள்ள போவதாக ஏற்கனவே கடிதம் எழுதி வைத்துள்ளார்.

 

அதில், நான் ஒரு தோல்வி அடைந்தவளாகவும், சுமையாகவும் உணர்கிறேன் என கூறி இருந்தார்.

 

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05