Jul 17, 2025 - 08:19 AM -
0
ஈரான்-இஸ்ரேல் இடையே கடந்த மாதம் 12 நாட்கள் தீவிர சண்டை நடந்தது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானை தாக்கியது. இதனால் கட்டாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் குண்டு வீசியது.
இவ்வாறு மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றம் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.இந்த நாடுகளுக்கு இடையேயான பகை நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. எனவே இந்த சூழலில் இந்தியர்கள் யாரும் தேவையின்றி ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து தூதரகம் தனது எக்ஸ் தளத்தில், 'கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் காரணமாக, ஈரானுக்கு இந்தியர்கள் யாரும் தேவையற்ற பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, அங்கு நிலவும் சூழலை கவனமாக பரிசீலிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும் ஈரானில் ஏற்கனவே இருக்கும் இந்தியர்களும், நாடு திரும்ப விரும்பினால் விமானங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து தற்போது உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.