Jul 17, 2025 - 06:38 PM -
0
மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று (17) நடைபெற்ற அமர்வில், செம்மணி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தும், இலங்கை அரசு சர்வதேச நீதியான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியும் தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் கொண்டுவந்த பிரேரணையை, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உட்பட 34 உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரித்து நிறைவேற்றினர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் இரண்டாவது அமர்வு, முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, தமிழரசு கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன், யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி தொடர்பான படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து, சர்வதேச நீதியான விசாரணை கோரி பிரேரணை முன்வைத்து உரையாற்றினார்.
அவர் உரையில், 'சகோதரி கிசாந்தினி படுகொலையுடன் தொடங்கிய இந்த செம்மணி படுகொலை, தமிழ் மக்களை திட்டமிட்டு அழிக்கும் ஒரு அங்கமாகும். சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த சோமரத்தின ராஜபக்ஷ, சர்வதேச மன்னிப்புச் சபையின் அழுத்தத்தால் கைது செய்யப்பட்டு, அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி புதைகுழி தோண்டப்பட்டது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் அது நிறுத்தப்பட்டது.
புதைக்கப்பட்ட சடலங்களின் எச்சங்கள் தோண்டி எரிக்கப்பட்டபோது, புகை மண்டலம் ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் தகவல் அளித்ததையடுத்து, சர்வதேச மன்னிப்புச் சபையின் அழுத்தத்தால் மீண்டும் தோண்டப்பட்டு, இதுவரை சிறுவர்கள் உட்பட 65 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சோமரத்தின ராஜபக்ஷ, தனது உயர் அதிகாரிகளின் பணிப்பின் பேரில் 400 இற்கும் மேற்பட்ட தமிழர்களை அழித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான், மிருசுவில் படுகொலை உள்ளிட்ட பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த மிருசுவில் படுகொலையில் சுனில் ரத்நாயனக்கா என்ற இராணுவ வீரர் 8 பேரை கொலை செய்து 9 ஆவது நபரை கொலை செய்ய முற்பட்டபோது தப்பியோடி உண்மையை வெளிப்படுத்தியதால் அந்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கிய அவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவரை பொது மன்னிப்பில் விடுதலை செய்தார்.
எனவே எமது இனத்தை திட்டமிட்டு அழிக்கும் எவரையும் நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவே இந்த தமிழ் மக்கள் மீதான படுகொலை தொடர்பில் எதிர்கால இளம் சமூதாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
இதனடிப்படையில் தற்போதைய அரசு இந்த செம்மணி படுகொலை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை இந்த விசாரணை சர்வதேச கண்காணிப்புடன் இடம்பெறவேண்டும் என்பதுடன் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதாக பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து பல உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றியதுடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 11 பேர் உட்பட 34 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததையடுத்து இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
--