Jul 17, 2025 - 07:18 PM -
0
கோழியைப் பிடிக்க முயன்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது.
தமிழகம், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகிலுள்ள வையம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த நடுப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமியின் மனைவி நாகரத்தினம் (வயது 60).
விவசாயத் தொழிலாளியான இவருக்கு பாலமுருகன் என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்றிரவு அவர்கள் வளர்த்து வந்த கோழி ஒன்று அருகிலுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து, ஒரு திட்டில் நின்று கொண்டிருந்தது.
இதைப் பார்த்த நாகரத்தினம், வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள், "நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினர்.
இந்நிலையில், இன்று காலை வீட்டில் யாரிடமும் சொல்லாமல், கோழியை மீட்பதற்காக நாகரத்தினம் கிணறு உள்ள பகுதிக்குச் சென்றார். பின்னர், கோழியைப் பிடிக்க கிணற்றுத் திட்டில் இறங்கியபோது, தடுமாறி கிணற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வையம்பட்டி பொலிஸர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் இறங்கி, கயிறு கட்டப்பட்ட கட்டிலைப் பயன்படுத்தி மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மணப்பாறை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.