Jul 18, 2025 - 10:04 AM -
0
இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது உண்டு.
இந்தநிலையில் அந்த கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் (ஜூன்) 3 ஆம் திகதி புகைப்பட ஆவணங்களுடன் முறைப்பாடு கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு நீதிமன்றில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார். அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த துஷ்பிரயோகம் மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறி அதிர வைத்தார்.
இதன் பேரில் கடந்த 4-ஆம் திகதி பெல்தங்கடி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 13 ஆம் திகதியன்று முறைப்பாட்டாளர், பெல்தங்கடியில் உள்ள முதன்மை ஜுடீசியல் நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடந்த 14 ஆம் திகதி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். முறைப்பாட்டாளரின் சட்டத்தரணிகளும், மங்களூரு சட்டத்தரணிகள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை பொலிஸார் தாமதப்படுத்துவதாகவும், அதனால் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.