Jul 18, 2025 - 04:19 PM -
0
சர்ச்சைக்குள்ளாகியுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு சொந்தமான ஹந்தானவத்த பகுதியில் 43 ஏக்கர் காணியை, காணி சீர்திருத்த சட்டத்திற்கு புறம்பாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்லவுக்கு விடுவிக்கப்பட்டதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழு, கோப் குழுவின் முன் அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதன்போது பொது நிறுவனங்கள் பற்றிய குழுவின் தலைவர் வைத்தியர் நிஷாந்த சமரவீர, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், பத்மசிறி லியனகே, சமிந்திராணி கிரியெல்லவுக்கு காணி வழங்க வேண்டிய எந்தவித கடப்பாடும் இல்லை என்று கூறினார்.
இதன்போது மேலும் கருத்த தெரிவித்த காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பத்மசிறி லியனகே,
''இந்த காணி தொடர்பாக 50 ஏக்கருக்கும் அதிகமான காணியை சொந்தமாக வைத்திருக்கும் 22 உரிமைகோருபவர்கள் உள்ளனர்.
உரிமை இல்லாத 46 பேர் உள்ளனர்.
இவர்களில் யாருக்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் இதுவரை காணி ஒதுக்கப்படவில்லை.
உரிமை இல்லாதவர்களுக்கு நிலம் ஒதுக்க எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஏனெனில் அந்த நிலங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றப்படுவதில்லை.
அதன்படி, சமிந்திராணி கிரியெல்ல என்ற ஒருவருக்கு காணி ஒதுக்க காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு எந்தக் கடப்பாடும் இல்லை.'' என்றார்.