செய்திகள்
முன்னாள் அமைச்சர் சந்திராணிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Jul 18, 2025 - 06:04 PM -

0

முன்னாள் அமைச்சர் சந்திராணிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தொடர்ந்த வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன் அழைக்கப்பட்டிருந்தது. 

இதன்போது பிரதிவாதி கோரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக வழக்கை எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு 11 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. 

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி முதல் 2019ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில், முறையான நடைமுறையைப் பின்பற்றாமல், எச்.எம். சந்திரவன்ச என்ற நபரை உலர் மண்டல அபிவிருத்தி அமைச்சின் திட்ட பணிப்பாளர் பதவிக்கு நியமித்தல் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து தனது நண்பர்கள் குழுவை சட்டவிரோதமாக பல்வேறு பதவிகளுக்கு நியமித்ததன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகக் கூறி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்துள்ளது. 

இந்த வழக்கில் 08 நபர்கள் சாட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், 25 ஆவணங்கள் வழக்குப் பொருட்களாக வழக்குடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05