செய்திகள்
ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிப்பு

Jul 18, 2025 - 07:29 PM -

0

ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிப்பு

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதித்தல், விளம்பர பலகைகளில் தமிழ் மொழி கட்டாயமாக இடம்பெற வேண்டும், கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களைக் கட்டுப்படுத்தல் உள்ளிட்ட 9 பிரேரணைகள் நேற்று (17) நடைபெற்ற மாநகரசபை அமர்வில் நிறைவேற்றப்பட்டன. 

மாநகரசபையின் 8வது சபையின் இரண்டாவது அமர்வு, முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் மாநகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. 

நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள்: 

தனியார் வகுப்புகளுக்கு தடை: மாநகரசபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் நடைபெறும் தனியார் வகுப்புகளுக்கு சட்டரீதியாக தடை விதிக்க வேண்டும் என்ற பிரேரணையை உறுப்பினர் தயாளராசா தரணிராஜ் முன்வைத்தார். 

செம்மணி புதைகுழி விசாரணை: செம்மணி புதைகுழி படுகொலையை கண்டித்து, சர்வதேச கண்காணிப்புடன் அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று உறுப்பினர் துரைசிங்கம் மதன் பிரேரணை கொண்டுவந்தார். 

வரவேற்பு கோபுரங்கள்: மாநகரசபையின் எல்லையை உறுதிப்படுத்தி, எல்லைகளில் வரவேற்பு கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உறுப்பினர் துரைசிங்கம் மதன் முன்மொழிந்தார். 

விளம்பர பலகைகளில் தமிழ் மொழி: வர்த்தக நிலையங்கள் மற்றும் விளம்பர பலகைகளில் தமிழ் மொழி கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்ற பிரேரணையை உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார் முன்வைத்தார். 

கட்டாக்காலி விலங்குகள் கட்டுப்பாடு: வீதிகளில் உலாவும் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களால் விபத்துகள் அதிகரிப்பதால், இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், திராய்மடு, நாவற்கேணி ரயில் கடவையில் நிரந்தர கடவைக் காப்பாளர்களை நியமிக்க ரயில்வே திணைக்களத்தை வலியுறுத்த வேண்டும் என்றும் உறுப்பினர் தயாளகுமார் கௌரி பிரேரணை கொண்டுவந்தார். 

பூங்காக்களுக்கு பாதுகாப்பு: மாநகரசபைக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டும் என்று உறுப்பினர் கருணாநிதி ஜனகன் முன்மொழிந்தார். 

வீதி விபத்து தடுப்பு: வீதி விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர் செல்வராசா குமார் பிரேரணை கொண்டுவந்தார். 

ஒருவழிப் பாதைகள்: திருப்பெரும்துறை, சேத்துக்குடா பகுதிகளில் உள்ள விபுலானந்தா வீதி மற்றும் விநாயகர் வீதி ஆகியவற்றை ஒருவழிப் பாதைகளாக மாற்ற வேண்டும் என்று உறுப்பினர் மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிந்தார். 

மலர்சாலை அமைப்பு: கள்ளியங்காடு மயானத்துக்கு அருகில் கொழும்பு, பொரளையில் உள்ள மலர்சாலைகள் போன்று மரக்கூட்டுத்தாபன பகுதியில் மலர்சாலை அமைக்க அரசகாணியைப் பெற வேண்டும் என்று முதல்வர் சிவம் பாக்கியநாதன் பிரேரணை கொண்டுவந்தார். 

மேலும், மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி வியாபாரத்தைத் தடை செய்து, அதற்கு மாற்றுத் தீர்வு காண ஒரு பெண் உறுப்பினர் உட்பட ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இந்தப் பிரேரணைகள் அனைத்தும் குழுநிலை விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு, முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05