Jul 30, 2025 - 12:43 PM -
0
மன்னார் மாவட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரசாங்க அதிபர்கள் பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரும் இன்று (30) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மன்னார் பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய மனோகரன் பிரதீப் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் - நிர்வாகத்திற்கும், மடு பிரதேசச் செயலாளராக கடமையாற்றிய கீ.பீட் நிஜாகரன் மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் - காணி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த இரு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களும் இன்று (30) மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்து மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதன் போது குறித்த இரு மேலதிக அரசாங்க அதிபர்களையும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மாலை அணிவித்து வரவேற்றனர். இதன் போது மன்னார் மாவட்டச் செயலகம், மன்னார், மடு பிரதேசச் செயலக பணியாளர்கள், உதவி பிரதேசச் செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு வரவேற்றனர்.
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகத்திற்கு நியமிக்கப்பட்ட மனோகரன் பிரதீப் 2012 இல் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து, 2013 தொடக்கம் 2015 வரை உதவி பிரதேச செயலாளராக மாத்தளை மாவட்டம் ரத்தோட்டை பிரதேச செயலகத்திலும், 2015 முதல் 2020 வரை உதவி பிரதேச செயலாளராக கண்டாவளை பிரதேச செயலகத்திலும், 2020 தொடக்கம் பிரதேச செயலாளராக மன்னாரிலும் பணியாற்றி வந்த நிலையிலே மேலதிக அரசாங்க அதிபர் நிர்வாகத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர் காணிக்கு நியமிக்கப்பட்டுள்ள கீ.பீட் நிஜாகரன் 2013 இல் இருந்து 2020.08.09 வரை திருகோணமலை உதவி காணி ஆணையாராகவும், 2020.08.10 இருந்து 2021.01.19 வரை முல்லைத்தீவு கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளராகவும், 2021.01.20 இருந்து 2021.02.28 வரை மன்னாரில் கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளராகவும் பணியாற்றியவர். 2021.03.01 முதல் அவர் மடுப் பிரதேச செயலாளராக பணியாற்றிவந்த நிலையிலே மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
--