வணிகம்
35 ஆண்டுகளாக டிஜிட்டல் இலங்கையை கட்டியெழுப்பிய பயணம், இப்போது FOUNDATION.LK-க்கு வழிவகுக்கிறது.

Jul 30, 2025 - 02:34 PM -

0

35 ஆண்டுகளாக டிஜிட்டல் இலங்கையை கட்டியெழுப்பிய பயணம், இப்போது FOUNDATION.LK-க்கு வழிவகுக்கிறது.

இவ்வருடம் .LK டொமைன் ரெஜிஸ்ட்ரி (LK DOMAIN REGISTRY) 35 ஆண்டுகளை எட்டியுள்ளது. TechCERT கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்து வருவதோடு இவ்வருடம் Foundation.LK ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைகிறது. 

ஒரு இலாப நோக்கற்ற செயற்திட்டமான FOUNDATION.LK இலங்கையர்களுக்கு இணையவெளியில் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் உலாவ தேவையான அறிவு, திறன்கள் மற்றும் வளங்களை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதோடு பொறுப்பான டிஜிட்டல் குடியுரிமையை ஊக்குவித்து, பரிணாமம் அடையும் டிஜிட்டல் தளத்தில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் உறுதுணையாக உள்ளது. 

2009 ஆம் ஆண்டு முதல், LK டொமைன் ரெஜிஸ்ட்ரி (LK DOMAIN REGISTRY), அதன் சமூக மேம்பாட்டு செயற்திட்டங்கள் மூலம், இலங்கை முழுவதும் 45,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை வழங்கியுள்ளது. இதன் செயல்முறை ரீதியான இலத்திரனியல் கற்றல் தளமான சுஹுருசர (SuhuruSara), வலைத்தள வடிவமைப்பு, நிரலாக்கம் மற்றும் பல்லூடக பாடநெறிகள் மூலம் 10,000 இற்கும் மேற்பட்ட கற்பவர்களுக்கு உள்நாட்டு மொழிகளில் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை விரிவாக்கி, அவர்களுக்கு ஆற்றல் வழங்கியுள்ளது. 

ஹிதவதி (Hithawathi) – இணையத்தளத்தில் உங்கள் நம்பிக்கைக்குரிய தோழி – 1.25 மில்லியனுக்கும் மேற்பட்ட இணைய பயனர்களுக்கு இன்றியமையாத இணைய பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்கி, அவர்கள் டிஜிட்டல் உலகில் நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் செயற்பட திறனளித்துள்ளது. மேலும், இணையம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் 10,500 இற்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு நேரடி ஆதரவை வழங்கியுள்ளதோடு இது இலங்கையின் டிஜிட்டல் பாதுகாப்பு தளத்தில் நம்பகமான உயிர்நாடியாக மாறியுள்ளது. 

சைபர் லொவட்ட பியாபத் (Cyber Lowata Piyapath), வெற்றிகரமாக நிறைவு செய்த ஒரு செயற்திட்டமாக தனித்து நிற்கிறது. இது 67 கல்வி வலையங்களில் உள்ள 1,649 பாடசாலைகளில், அப்பாடசாலைகளின் வலைத்தளங்களை நிர்மாணிப்பதற்கும் 18,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 2,100 ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் யுகத்தில் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான டிஜிட்டல் கல்வியறிவு திறன்களை வழங்கியது. இச்செயற்திட்டங்கள் இனிவரும் காலங்களில் FOUNDATION.LK இனால் மேற்கொள்ளப்படும். 

இலங்கையின் கிராமப்புற மற்றும் தொலைதூர மாவட்டங்களில் டிஜிட்டல் திறன்கள் பயிற்சிக்கு காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலானது அறிவு இடைவெளியினை விரிவாக்கியுள்ளதோடு இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தில் வாய்ப்புகளையும் மட்டுப்படுத்தியுள்ளது. Foundation.LK ஆனது, இப்பிரதேசங்களில் வாழும் பின்தங்கிய சமூகங்களை அடைந்து இப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு உறுதிபூண்டுள்ளது. 

இதை நிவர்த்தி செய்வதற்காக, சுஹுருசரவின் இணையவழி கல்வி திட்டங்கள் பரவலாக அணுகக்கூடியவையாக உள்ளன. உள்நாட்டின் தாய்மொழிகளில் பாடநெறிகளை வழங்கி, எல்லைகள் கடந்து கற்பவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் திறன்களை வெளிப்படுத்த உதவுகின்றன. 

ஹிதவதி, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டமானது, பிரஜைகளுக்கு அத்தியாவசியமான டிஜிட்டல் பாதுகாப்பு அறிவை வழங்கி, ஒன்லைன் தளங்களில் நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் உலாவ அவர்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. Foundation.LK, அதன் அங்கீகரிக்கப்பட்ட மையங்களின் வலையமைப்பு மூலம், கிராமப்புற மற்றும் மத்திய நகர்ப்புற கல்வி நிலையங்களை சான்றளிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பாடநெறிகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு செயற்திட்டங்கள் மூலம் வலுப்படுத்தி, டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து இளைஞர்களுக்கு உள்நாட்டு மற்றும் உலகளாவிய தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக தேவையான திறன்கள், அணுகல் மற்றும் தகுதிகளை வழங்குகிறது. 

LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் டொமைன் பதிவாளர் பேராசிரியர் கிஹான் டயஸ் தனது கருத்துக்களை தெரிவிக்கையில் “முதன்மை நிலை ‘.lk’ டொமைனின் ஒரே நிர்வாகியாக, LK டொமைன் ரெஜிஸ்ட்ரி ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக இயங்கி, எப்போதும் சமூகங்களுக்கு ஆற்றல் வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளது. எங்களின் ஆரம்பப் பணியானது இணைய பயன்பாட்டை விரிவாக்குவதில் கவனம் செலுத்தியிருந்தாலும், இலங்கை முழுவதும் உள்ள மக்கள் டிஜிட்டல் உலகின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும் என்கின்ற அளவிற்கு எங்கள் நோக்கம் ஒரு ஆழமான நோக்கத்தை நோக்கி வளர்ந்தது. அதாவது இடைவெளிகளைக் குறைத்து, திறன்களை உருவாக்கி, அனைவறையும் உள்ளடக்கிய டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்த பணியை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக Foundation.LK அறிமுகப்படுத்தப்பட்டது.” 

TechCERT நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. குஷான் ஷர்மா கருத்துத் தெரிவிக்கையில், “20 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் முதல் கணினி அவசரத் தயார்நிலை குழுவாக நிறுவப்பட்ட TechCERT, இன்று நாட்டில் முன்னணி தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் பொறியியல் ஆலோசனை சேவைகளை வழங்கும் மையமாக உருவாகியுள்ளது.” 

FOUNDATION.LK, இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களை டிஜிட்டல் ஆற்றல் பெறச் செய்யும் தனது பணியில் பங்குதாரர்களாக அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அழைக்கிறது. இத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பதன் மூலமும், திட்டங்களுக்கு நிதியுதவி செய்வதன் மூலமும், விழிப்புணர்வு அமர்வுகளை நடத்துவதன் மூலமும் அல்லது நிதி அல்லது பொருள் உதவி வழங்குவதன் மூலமும் பங்களிப்புச்செய்ய முடியும். மேலதிக தகவல்களை www.foundation.lk வலைத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05