வடக்கு
உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்தப்பட வேண்டும்

Jul 30, 2025 - 03:53 PM -

0

உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்தப்பட வேண்டும்

உள்ளூராட்சி மன்றங்கள் அதிகார பகிர்விற்கான ஆட்சி முறை என்ற நிலையை ஏற்றுக்கொள்ளாது சாதாரண திணைக்களங்கள் போல் அணுப்படும் நிலைமை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்திய மற்றும் மாகாண கட்டமைப்பில் இருந்து அதிகாரங்களை நிலைநிறுத்துவது கடினமான விடயமாகவே உள்ளது என சுவிசர்லாந்து தூதுவருடனான சந்திப்பில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

 

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் தலைமையிலான குழுவினர் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களை நேற்று (29) யாழ்ப்பாணத்தில் சந்தித்து புதிதாக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட தவிசாளர்களுடன் கலந்துரையாடினர்.  

 

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே தாம் இவ்வாறு தெரிவத்ததாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

புதிதாக உள்ளூராட்சி மன்றங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றங்களை அரசாங்கம் வலுப்படுத்தும் வகையில் சர்வதேச அனுபவங்களைப் பெற்று மத்திய அரசாங்கம் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும். இலங்கையில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் சாதாரணமான உள்ளூராட்சி மன்றங்களை ஓர் திணைக்களம் போன்றே மத்திய அரசாங்கத்தின் அணுகும் தன்மை காணப்படுகின்றது. இதற்குப் பின் அதிகாரங்களைப் பகிர மறுக்கும் மத்திய அரச கொள்கை நிகழ்ச்சி நிரல் உள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களால் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தியையும் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் நாம் சமமாகவே முன்கொண்டு செல்ல முயற்சிக்கின்றோம். இவ் விடயத்தில் உள்ளூராட்சியை பலப்படுத்த தங்கள் போன்ற நாடுகளின் ஒத்துழைப்பு எமக்குத் தேவை.

 

உள்ளூராட்சி மன்றங்களின் பணிப்பரப்புக்களை ஏனைய நாடுகள் போல் முன்னெடுக்க அதிகாரங்கள் வலுப்படுத்தப்படவேண்டும்.

 

மாறாக அரசாங்கம் மத்தியை நோக்கி அதிகாரங்களை குவிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றது. தமிழ் மக்களில் பெருமளவானோர் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் ஊடான முதலீடுகளை பெற்று தொழில்துறை ரீதியிலான அபிவிருத்திகளை போரினால் பாதிக்கப்பட்ட எமது பகுதிகளில் மேற்கொள்ள வேண்டும்.

 

எனினும் அரசு தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலையோ நீதியையோ நிலைநிறுத்தாமை காரணமாக புலம்பெயர் முதலீட்டாளர்கள் தாயகம் திரும்ப அஞ்சுகின்றனர்.

எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறலுக்கு உள்நாட்டில் நீதியை ஒருபோதும் பெற்றுவிட முடியாது என்பதை கடந்த போருக்குப் பின்பான காலந்தாழ்தல்கள், அனுபவங்கள் வாயிலாக முடிவுசெய்துள்ளோம் என சுவிசர்லாந்து தூதுவருக்கும் தவிசாளர்களுக்குமான சந்திப்பில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05