Jul 30, 2025 - 05:39 PM -
0
இலங்கையர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்க கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த இந்த மனுவில், ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உட்பட 27 நபர்கள் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி கனிஷ்க விதாரன ஊடாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் ஊடாக மனுதாரர் தெரிவித்துள்ளதாவது, இலங்கை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பான திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனவரி 27 மற்றும் ஜூன் 2ஆம் திகதிகளில் இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த அமைச்சரவை முடிவுகள் பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ அறிவிக்கப்படாமல் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக இலங்கையர்களின் பயோமெட்ரிக் தரவை இந்தியா அணுக அனுமதிக்கும் என்றும், இதன் மூலம் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திற்கு தலையிட வாய்ப்பளிக்கும் என்றும், இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயற்பாடு என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும், இந்த அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.