Aug 7, 2025 - 12:53 PM -
0
தமிழில் 'இமைக்கா நொடிகள்' படம் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ராஷி கண்ணா.
அதனை தொடர்ந்து வருடம் தோறும் தவறாமல் தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இன்னொரு பக்கம் தெலுங்கிலும் இவருக்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் '120 பகதூர்' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகனாக பர்ஹான் அக்தர் நடிக்கிறார். இவருடன் இணைந்து நடிப்பது குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ராஷி கண்ணா, அவரது அனுபவம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“நான் சினிமாவில் நடிக்க வரும் முன்பு மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் சினிமாவில் நுழையும் யோசனை இருந்தபோதுதான் எனக்கு ஒரு விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அப்படி அந்த விளம்பரத்தில் நான் முதன் முதலில் நடித்தது நடிகர் பர்ஹான் அக்தருடன் தான். சுமார் பத்து வருடம் ஓடிவிட்ட நிலையில் தற்போது மீண்டும் அவருடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறேன் என்பது ஆச்சரியமான விஷயம்.
பொதுவாக சொல்வார்களே, வாழ்க்கை என்பது ஒரு முழு வட்டம் போல.. அதற்கேற்ற மாதிரி இப்போது பர்ஹான் அக்தருடன் மீண்டும் இணைந்து நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார்.