Aug 7, 2025 - 01:35 PM -
0
இந்தியாவின் சென்னை அசோக் நகர் பகுதியில், ஆன்லைன் உணவு விநியோக ஊழியரான கலையரசன் (23) என்ற இளைஞர், தனது மனைவியின் சகோதரர்களால் நடு ரோட்டில் விரட்டி வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர கொலைக்கு, கலையரசனின் மனைவி தமிழரசியின் கள்ளக்காதல் மற்றும் அதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனைகளே காரணம் என்பது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலையரசன், அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர். பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் டெலிவரி ஏஜென்டாக பணியாற்றி வந்தார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. குடும்பத்தின் நலனுக்காக, கலையரசன் நேரம் காலம் பாராமல், உணவு உண்ணாமல் தெருத்தெருவாக பைக்கில் சுற்றி உழைத்து, மனைவி மற்றும் மகனுக்கு தன்னால் முடிந்தவற்றை செய்து வந்தார்.
ஆனால், தமிழரசியின் எதிர்பார்ப்புகளை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால், தம்பதியர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்தச் சூழலில், ஜூன் 15, 2025 அன்று, கலையரசன் தனது மூன்று வயது மகனை தற்செயலாக வீதியில் சந்தித்தார். மகனைப் பார்த்த மகிழ்ச்சியில், அவரை அருகிலுள்ள கடைக்கு அழைத்துச் சென்று, சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார்.
இதனைக் கண்ட தமிழரசியின் சகோதரர்களான சஞ்சய் (18), சக்திவேல் (20), மற்றும் சுனில் குமார் (20) ஆகியோர், 'எங்கள் அக்காவின் குழந்தைக்கு நீ யார் சாக்லேட் வாங்கிக் கொடுக்க?' எனக் கேள்வி எழுப்பி, கலையரசனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாலும், அன்று இரவு, மூவரும் திட்டமிட்டு கலையரசனை நடு ரோட்டில் விரட்டி, அறிவாளால் வெட்டினர்.
இந்த பயங்கர தாக்குதல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரோயாபேட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கலையரசன், ஜூன் 21, 2025 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஆரம்பத்தில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.
பொலிஸார் தமிழரசியிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. கணவரைப் பிரிந்த பிறகு, தமிழரசி அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் கள்ளக் காதல் உறவு வைத்திருந்தார்.
இதை அறிந்த கலையரசன், மனைவியின் தகாத உறவைக் கண்டித்து வந்தார். மகனைப் பார்க்கச் செல்லும்போது, தமிழரசியைப் பார்த்து தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.
தமிழரசி, கள்ளக் காதலனுடன் உடலுறவில் ஈடுப்பட்டு, கலையரசனை வீட்டு வாசலில் நிற்க வைத்து, தண்ணீர் கூட வழங்காமல் அவமதித்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தன்று, மகனுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்ததற்காக தமிழரசியின் சகோதரர்கள் கலையரசனைக் கண்டித்ததால், அவர் மனமுடைந்து, தமிழரசியின் வீட்டிற்குச் சென்று தனது உரிமைகளைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அகற்ற வேண்டும் என முடிவு செய்த தமிழரசி, தனது சகோதரர்களிடம் கண்ணீர் வடித்து, தனது வாழ்க்கை பாழாகிவிட்டதாகக் கூறி அவர்களைத் தூண்டிவிட்டார்.
இதன் விளைவாக, சஞ்சய், சக்திவேல், மற்றும் சுனில் குமார் ஆகியோர் கொலைவெறியுடன் கலையரசனை விரட்டி வெட்டிக் கொன்றனர். பொலிஸார், ஏற்கனவே மூன்று சகோதரர்களையும் கைது செய்த நிலையில், கொலைக்குத் தூண்டுதல் அளித்ததாக தமிழரசியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்தக் கொலைக்கும் தமிழரசியின் கள்ளக் காதலனுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், குடும்ப உறவுகளில் நம்பிக்கையின்மை, கள்ளக் காதல், மற்றும் பழிவாங்கும் மனப்பான்மையால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது.
சிசிடிவி காட்சிகள், குற்றத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கு சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் தொடர் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்த வழக்கில் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.