Aug 7, 2025 - 03:23 PM -
0
தொழில்முறை விற்பனை சிறப்பிற்கு வலுவூட்டி ஆதரிக்கும் வகையில் செரண்டிப் நிறுவனம் (SFML), SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025இன் உத்தியோகபூர்வ போசணைப் பங்காளராக இணைகின்றது.
SFML என்பது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) பன்முகப்படுத்தப்பட்ட முன்னணி குடும்ப வணிகங்களில் ஒன்றான, துபாயை தலைமையிடமாகக் கொண்ட அல் குரைரின் முழு உரிமைத்துவம் பெற்ற துணை நிறுவனமாகும். கடந்த 16 ஆண்டுகளாக, தேசத்தை போஷிப்பது என்ற நோக்கத்துடன் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகித்து வரும் SFML, இலங்கையின் உணவுத் துறையின் நம்பகமான நாமமாக இருந்து வருகிறது.
செரண்டிப் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்த இணைவு முறைப்படுத்தப்பட்டது. இந் நிகழ்வில் செரண்டிப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜய் சர்மா, வர்த்தக நாமம் மற்றும் பெருநிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் காலிங்க விஜேசேகர மற்றும் வர்த்தக நாம உதவி முகாமையாளர் பைசல் டீன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வுகள் மற்றும் நிலைத்தன்மைக்கான துணைத் தலைவர் (Vice President) இனொச் பெரேரா, SLIMஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி சமில் விக்ரமசிங்கே, நிகழ்வுகள் மற்றும் நிலைத்தன்மைக்கான தலைவர்(Head) கங்கானி லியனகே மற்றும் நிகழ்வுகள் மற்றும் நிலைத்தன்மைக்கான கனிஷ்ட நிர்வாகி அவிஷ்க அத்தநாயக்க ஆகியோர் SLIMஐப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
2019 முதல் SLIM உடன் இணைந்து தொழில்முறை சிறப்பிற்கான நீண்டகால ஆதரவை செரண்டிப் நிறுவனம் வழங்கி வருகின்றது. ஆரம்பத்தில் Effie விருதுகள், Brand Excellence விருதுகள் மற்றும் தேசிய விற்பனை விருதுகளுக்கான பெருநிறுவன அனுசரணையாளராக இருந்த SFML, 2024ஆம் ஆண்டில் Brand Excellence விருதுகளுடன் தனது உறுதிப்பாட்டை தொடர்ந்தது.
இந்த இணைவு, தேசத்தை போஷித்தல் என்ற செரண்டிப் நிறுவனத்தின் நோக்கத்திற்கான பரந்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் விற்பனை நிபுணர்களின் பங்களிப்புகளை இது கொண்டாடுகிறது. விற்பனை சகோதரத்துவத்தை மேம்படுத்துவதையும் சமூக மற்றும் பொருளாதார சூழல்களில் விற்பனைத் தொழிலின் மதிப்பு மற்றும் கண்ணியத்தை வலுப்படுத்துவதையும் நோக்காக கொண்டு நிறுவனம் உத்தியோகபூர்வ போசணைப் பங்காளராக இணைந்துள்ளது.
உணவுத் துறையில் தரம் மற்றும் புதுமைக்கான அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்ற செரண்டிப் நிறுவனம், இந்த இணைவை தொழில்முறை வளர்ச்சி மற்றும் சிறப்பை ஆதரிக்கும் பல்வேறு முயற்சிகள் மூலம் தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதன் பெருநிறுவன கொள்கையின் விரிவாக்கமாகக் கருதுகின்றது.
2000ஆம் ஆண்டில் அரை நாள் பயிற்சி அமர்வாக இருந்து தற்போது அதன் 25ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் SLIM தேசிய விற்பனை விருதுகள், விற்பனை திறமையை அங்கீகரிப்பதற்கான இலங்கையின் முதன்மையான தளமாக வளர்ந்துள்ளது. B2B மற்றும் B2C துறைகளில் விற்பனைச் சிறப்பிற்கான பரந்த, உள்ளடக்கிய அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில் 2023ஆம் ஆண்டில் NASCOஇலிருந்து தேசிய விற்பனை விருதுகளுக்கான மாற்றம் அமைந்திருந்தது. கடந்த பல ஆண்டுகளாக இந்த விருதுகள், வளர்ந்து வரும் தொழில்துறைகளை இனங்கண்டு அவற்றை உள்ளடக்கும் வண்ணம் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் 2025ஆம் ஆண்டில் இவ்விருதுகளுக்காக 112இற்கும் மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து 1,200இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய போட்டி நிறைந்த வணிகச் சூழலில் விற்பனை வல்லுநர்கள் வகிக்கும் பல்வேறு பங்களிப்புக்களை அங்கீகரிக்கும் வகையில், SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025, பல பிரிவுகளில் சிறந்த சாதனைகளை தொடர்ந்து கௌரவிக்கவுள்ளது. இந்த விருது வழங்கும் விழா, தொழில்துறை வல்லுநர்களுக்கான அங்கீகார தளமாகவும் தங்கள் நுண்ணறிவுகளையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும்.