Aug 7, 2025 - 04:02 PM -
0
கொமர்ஷல் வங்கியானது கல்விக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், யுனிசெஃப் உடனான கூட்டு முயற்சியின் கீழ் இலங்கையில் பாலர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மொனராகலை மாவட்டத்தில் உள்ள மடகமவில் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட முத்துக்குமரன முன் பள்ளியை அப்பாடசாலையின் நிர்வாகத்திடம் அண்மையில் கையளித்தது.
பாடசாலையை கையளிக்கும் இந்நிகழ்வில் கொமர்ஷல் வங்கியின் ஊவா -சப்ரகமுவ பிராந்தியத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. சமிந்த கலுகமகே மற்றும் மொனராகலை கிளை முகாமையாளர் திரு. உபாலி மாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர். யுனிசெப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்பாடல், ஆலோசனை மற்றும் பங்குடைமைகளின் தலைவர் திரு. பிஸ்மார்க் ஸ்வாங்கின் மற்றும் கல்வி அதிகாரி திரு. சுகத் அதிகாரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொமர்ஷல் வங்கியின் பங்களிப்பானது, பாடசாலையின் கட்டிட உள்கட்டமைப்பை முழுமையாகப் புதுப்பிக்கவும், தரமான தளபாடங்கள் மற்றும் மாணவர்களின் வயதுக்கு ஏற்ற கற்றல் உபகரணங்களை வழங்கவும், விளையாட்டு மூலம் குழந்தைகளுக்கு கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்கவும் உதவியது.
இந்தத் திட்டத்தின் பரந்த நோக்கங்களில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு, பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களிடையே விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக உள்ளுார் மற்றும் தேசிய பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
கொமர்ஷல் வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR) யுக்தியில் கல்வி ஒரு முக்கிய தூணாக திகழ்கிறது. வங்கியானது இன்றுவரை, இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு 386 தகவல் தொழில்நுட்ப (IT) ஆய்வு கூடங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன் 180 அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மற்றும் கணிதத்தை (STEM) மையமாகக் கொண்ட வகுப்பறைகளை நிறுவுவதற்கு ஆதரவளித்துள்ளது, மேலும் 165 பாடசாலைகளை டிஜிட்டல் கற்றல் உள்கட்டமைப்போடு பொருத்திய தேசிய ஸ்மார்ட் பாடசாலையாக மாற்றும் முயற்சியில் முன்னணி பங்காற்றியுள்ளது. டிஜிட்டல் கற்றல் அணுகலை மேம்படுத்த, வங்கியின் “சிப்னேனா” இணையத்தள கல்வி தகவு நடைமுறை வீடியோக்கள் மற்றும் ஊடாடும் பொருட்கள் உட்பட டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பாடசாலை பாடத்திட்ட உள்ளடக்கத்தை வழங்குகிறது.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.