Nov 3, 2025 - 10:47 AM -
0
அரசியல் சூழல் மிகவும் வித்தியாசமானது சமத்துவம் என்ற போர்வையில் தமிழ்த்தேசியத்தைச் சிதைப்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பாலமீன்மடுவைச் சேர்ந்த அருணன் தமிழீழனின் முள்ளியில் தொலைந்த முகவரிகள் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உள்ளிட்ட மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள், பொதுமக்கள் லைட்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு, நூல் அறிமுகவுரையினை, நயவுரையினை அன்பழகன் குரூஸ் நிகழ்த்தியதுடன் நூலாசிரியர் அறிமுகத்தினை கலைவேந்தன் நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், நூலாசிரியரின் பெற்றோர் மற்றும் நூலாசிரியர் உள்ளிட்டோரால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
தொடர்ந்து நூலாசிரியால் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அதிதிகளுக்கு கவிதை நூல் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினரால் கன்னிக் கவிஞர் பொன்னாடை போர்த்தி வாழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிறிநாத்,
போர்வலி சுமந்த மண்ணின் மனதை கவிதைகளால் வெளிப்படுத்தியிருக்கின்றார் கவிஞர் தமிழீழன்.
எமது தமிழினம் மிக இக்கட்டான மிக மோசமாக இன அழிப்பு செய்யப்பட்ட நிகழ்வை வரலாற்று ஆவணமாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு அந்த வகையில் இந்தப் புத்தகத்தை ஒரு ஆவணப்பதிவாகவே நான் பார்க்கின்றேன்.
பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை மறந்து மனித உரிமை மீறல்களுக்கு எதுவித தீர்வும் கிடைக்காத இந்தத் தருணத்தில் இவ்வாறான புத்தகம் வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
கடந்த காலங்களில் தமிழ் மக்களின் துயரம் எவ்வாறு இருந்தது என்பதை தனது கவிதையிலே வெளிப்படுத்தியிருக்கின்றார்.
போருக்குப் பின்னராக தமிழ் மக்களுக்கு இழக்கப்பட்ட நீதியினை கடந்த கால அரசாங்கங்கள் எதுவும் தரவில்லை. இந்த அரசாங்கமும் தர மறுக்கின்றது.
அபிவிருத்தி நல்லிணக்கம் என்ற போர்வையில் எமது அனைத்து விடயங்களும் இளைஞர்கள் மத்தியில் அழிக்கப்பட்டு வருகின்றை நிலையில் இவ்வாறான புத்தகங்கள் ஊடாக எமது வடுக்களை எமது அடுத்த சந்ததியினருக்குக் கொண்டு செல்ல கவிஞர் முற்பட்டிருக்கின்றார்.
இன்றைய அரசியல் சூழல் மிகவும் வித்தியாசமானது சமத்துவம் என்ற போர்வையில் தமிழ்த்தேசியத்தைச் சிதைப்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.
அபிவிருத்தி தேவைதான் போதைப்பொருள் ஒழிப்பு தேவைதான் அதற்காக தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சனைகளை விடுத்து அதனை மத்திரம் நிறைவேற்ற முடியாது.எமது கடந்த கால அநீதிகள் தொடர்பில் எண்ணும் போது மனது கணக்கும்.
நாம் ஐரோப்பியர்களின் ஆட்சிக்கு முன்னர் நாம் சுதேச ஆட்சியைக் கொண்டவர்களாக இருந்தோம். ஆனால் வெள்ளையரின் ஆட்சிக்குப் பின்னர் எமது தேசியம் சிதைக்கப்பட்டது.
ஆவணப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களின் தமிழர்களின் வரலாறுகள், பாரம்பரியங்களை ஆவணப்படுத்தத் தவறியுள்ளோம்.
போர் மௌனிக்கப்பட்ட பின்னர் எமது இனரீதியான எந்தவித திட்டமிட்ட செயற்பாடுகளும் இன்றுவரை கட்டமைக்கப்படவில்லை. இன்று மறைமுகமாக எமது இனத்தின் வரலாறுகள் மறைக்கப்படுவதற்கான, மறக்கப்படுவதற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
தமிழ்த்தேசியம் சார்ந்த இவ்வாறான கலை இலக்கியங்களை ஆவணப்படுத்தும் போதுதான் எமது வரலாறுகள் எமது அடுத்த சந்ததிக்குக் கொண்டு செல்லப்படும். பெற்றோர்கள் எமது பிள்ளைகளைத் தமிழ்த் தேசியத்தில் ஊட்டி வளர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.
--

