Nov 4, 2025 - 11:05 AM -
0
ஆடம்பரத்திற்கும், எல்லையை மீறிய முயற்சிகளுக்கும் பெயர் பெற்ற நாடான டுபாய், இப்போது கோப்பி (coffee) உலகில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஒரு கோப்பை கோப்பியை சுமார் 1,000 அமெரிக்க டொலர் என்ற விலையில் உள்ளுர் உணவகம் ஒன்று விற்பனை செய்துள்ளது.
இதனால் உலகின் மிகவும் விலையுயர்ந்த கோப்பியாக அது கருதப்படுவதுடன் சாதனையாகவும் பதிவாகியுள்ளது.
இந்த விலையுயர்ந்த பானம், பனாமியன் கோப்பி விதைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இந்த விலை உயர்ந்த கோப்பி பானத்தை வழங்கும் ஜூலித் உணவகத்தின் இணை நிறுவனர் செர்கான் சாக்ஸோஸ் கூறுகையில் எங்கள் முதலீட்டிற்கு டுபாய் தான் சரியான இடம் என்று நாங்கள் உணர்ந்தோம் எனக் கூறியுள்ளார்.
கோப்பி பிரியர்களின் மையமாக மாறியுள்ள ஒரு தொழில்துறை பகுதியில் அமைந்துள்ள ஜூலித், சுமார் 400 கோப்பைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
டுபாய் ஏற்கனவே கடந்த மாதம் தான், ரோஸ்டர்ஸ் வழங்கிய 2,500 திர்ஹாம் பெறுமதியான கோப்பிக்கு உலகின் மிக விலையுயர்ந்த கோப்பிக்கான கின்னஸ் சாதனையைப் படைத்தது.
இப்போது, அதனை ஜூலித் கஃபேயின் 3,600 திர்ஹாம் பெறுமதியான கோப்பி முறியடித்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
ஜூலித் கஃபே இந்த அரிய கோப்பி விதைகளை, பனாமாவில் நடந்த ஏலத்தில் பல மணி நேரம் நீடித்த கடுமையான போட்டிக்குப் பிறகு, நூற்றுக்கணக்கான ஏலங்களுக்கு மத்தியில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

