Nov 5, 2025 - 08:48 AM -
0
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA), ஒயில் ஃபாம் செய்கை மீதான தடையை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் நாட்டிற்கு ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வருவதாகவும் அது எச்சரித்துள்ளது. ஏப்ரல் 2021இல் ஒயில் ஃபாம் செய்கைக்கு தடை விதிக்கப்பட்டதில் இருந்து, 2021 முதல் 2025 வரை இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்க்காக 800 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக சம்மேளனம் மதிப்பிட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியின் மூலம் கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கக்கூடிய சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக, இலங்கை தொடர்ந்து அதிகப்படியான வெளிநாட்டுச் செலவுகளைச் (foreign exchange) செலவழித்து வருவதாக அந்தச் சம்மேளனம குறிப்பிட்டது. நாட்டின் பயிர் பல்வகைப்படுத்தல் மூலோபாயத்தின் ஒரு முக்கிய தூணாக ஒரு காலத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2021இல் ஏற்பட்ட திடீர் கொள்கை மாற்றம், சமையல் எண்ணெய் தன்னிறைவுக்கான முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது. மேலும், இது இலங்கையின் பரந்த பொருளாதார மீட்சிக்கு ஒரு பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒயில் ஃபாம் செய்கை இலங்கையில் முதன்முதலில் 1968இல் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், றப்பர் செய்கையில் நஷ்டத்தை எதிர்கொண்ட பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs), அதற்கு மாற்றுகளைத் தேடத் தொடங்கியபோது, 2000களின் முற்பகுதியில் தான் இது அதிக கவனத்தைப் பெறத் தொடங்கியது. அந்த நேரத்தில் இருந்த அரசாங்கம், இந்த பயிரின் மகத்தான திறனை அங்கீகரித்தது. அதன் விளைவாக, 2009ஆம் ஆண்டு புதிய ஒயில் ஃபாம் செய்கையை நிறுவுவதற்காக வரிச் சலுகைகளை நீட்டிப்பதாக உறுதியளித்தது. மேலும், 2016ஆம் ஆண்டுக்குள் 20,000 ஹெக்டேயர் வரை விரிவாக்கம் செய்வதற்கும் முறையாக ஒப்புதல் அளித்தது.
2021க்கு முன்பு, உள்ளூர் ஒயில் ஃபாம் உற்பத்தி, உள்நாட்டுத் தேவையின் குறிப்பிடத்தக்கப் பங்கினை வழங்கியது. இது இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களுக்கு ஒரு மலிவான மற்றும் திறமையான மாற்றாக இருந்தது. ஆனால், தற்போதுள்ள தடையையும் மீறி, சிறப்பு இறக்குமதி உரிமங்களின் கீழ் ஒயில் ஃபாம் மற்றும் அது தொடர்பான கொழுப்புகள் சந்தைக்குள் தொடர்ந்து நுழைகின்றன. இதன் பொருள், இலங்கை தன்னால் எளிதாக உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய தயாரிப்புகளுக்காக வெளிநாட்டு விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதாகும்.
பிராந்திய தோட்ட நிறுவனங்கள் (RPCs) நீண்ட காலமாக ஒரு வாதத்தை முன்வைத்து வருகின்றன: ஒயில் ஃபாம் செய்கையே இலங்கையின் தோட்டப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வருமான ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், மற்றும் வெளிநாட்டுச் செலவினங்களைக் பாதுகாக்கவும் மிகவும் நிலையான வழியாகும். பாரம்பரிய எண்ணெய் பயிர்களான தேங்காய் அல்லது சோயாபீன்ஸ் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில், ஒயில் ஃபாம் செய்கையானது ஒரு ஹெக்டேயருக்கு மூன்று முதல் எட்டு மடங்கு அதிக எண்ணெயை விளைவிக்கிறது. இதனால் குறைவான நிலமும், குறைந்த உள்ளீடுகளும் தேவைப்படுகின்றன. சரியான கொள்கைகள் நடைமுறையில் இருந்திருந்தால், இலங்கை சமையல் எண்ணெயில் சுய- தன்னிறைவை அடைந்திருக்கலாம், இதனால் இறக்குமதி செலவில் பில்லியன்களைச் சேமித்திருக்கலாம். மேலும், புதிய கிராமப்புற வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியிருக்கலாம். மாறாக, இந்தத் தடை இந்தத் துறையை நிலையற்ற தன்மையில் விட்டுவிட்டது, முதலீடுகளை முடக்கியுள்ளதுடன், மலிவான சமையல் கொழுப்புகளைச் சார்ந்துள்ள பல தொழில்களில் ஒரு சங்கிலித் தொடர் விளைவையும் தூண்டிவிட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட நாற்றுகள் பயன்படுத்தப்படாததால் பல மில்லியன் இழப்பு
கொள்கை மாற்றத்திற்கு முன்பு, ஃபாம் ஒயிலின் பொருளாதார பலனை அரசாங்கமே அங்கீகரித்தது. 2009இல், கலப்பின விதை இறக்குமதிக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அத்துடன், உள்ளூர் செய்கை தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணி ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டுக்குள், எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பையும் தவிர்க்கும் வகையில், பாழடைந்த நிலங்களில் மட்டுமே செய்கையை விரிவுபடுத்தி 20,000 ஹெக்டேயர் வரை விரிவாக்கம் செய்வதற்கு அரசு முறையாக ஒப்புதல் அளித்தது. இந்தத் தெளிவான கொள்கை சமிக்ஞைகளால் ஊக்குவிக்கப்பட்டு, வட்டவளை, நாமுனுகுல, எல்பிட்டிய, ஹொரண மற்றும் மல்வத்தவெலி உட்பட முன்னணி தோட்ட நிறுவனங்கள், நாற்றுகள், ஆலைகள் மற்றும் ஆராய்ச்சி வசதிகளில் பில்லியன் கணக்கில் முதலீடு செய்தன. ஒயில் ஃபாம் செய்கை மற்றும் பதப்படுத்துதல் துறையின் மொத்த முதலீடு 23 பில்லியன் இலங்கை ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் 2021இல், அரசாங்கம் திடீரென அடுத்தகட்ட ஒயில் ஃபாம் செய்கையையும், கச்சா ஃபாம் ஒயில் இறக்குமதியையும் நிறுத்தியது.
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் (PA) கூற்றுப்படி, பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நாற்றுகள் மற்றும் இளம் தாவரங்களின் மதிப்பு 550 மில்லியன் இலங்கை ரூபாயை தாண்டியுள்ளது. இந்த நாற்றுகள் அதிக செலவில் இறக்குமதி செய்யப்பட்டன; குறிப்பாக இலங்கையின் மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்காக பிரத்யேகமாக வளர்க்கப்பட்டன. இவை 25 ஆண்டுகள் வரை விளைச்சலைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அந்த இறக்குமதி செய்யப்பட்ட நாற்றுகள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. இது கொள்கை முரண்பாட்டையும், வீணடிக்கப்பட்ட தேசிய சொத்துக்களையும் தெளிவாகக் காட்டும் ஒரு சின்னமாக உள்ளது.
தொழில்துறைகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரங்களில் ஒரு சுழற்சி விளைவு
இந்தத் துறை கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்ட 2.5 பில்லியன் ரூபாயை பங்களித்தது. இந்தத் தடையின் காரணமாக, அந்தக் கிராமப்புற சமூகங்களின் வருமானத்தில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆலை நடத்துபவர்கள், சுத்திகரிப்பாளர்கள் மற்றும் அதன் தொடர்பான உற்பத்தியாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கப் போராடி வருகின்றனர். 200 பில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பேக்கரி மற்றும் மிட்டாய் தொழில், மார்கரின் (margarine) மற்றும் சமையல் எண்ணெய் போன்ற உள்ளீடுகளுக்கான குறிப்பிடத்தக்க விலை உயர்வுகளை எதிர்கொண்டுள்ளது. இதன் செலவுகள் இறுதியில் நுகர்வோரிடம் திணிக்கப்படுகின்றன.
மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் ஃபாம் ஒயிலின் பங்கு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. இது இயற்கையாகவே trans-fat-free மற்றும் antioxidants மற்றும் விற்றமின் E நிறைந்தது. மேலும், இது hydrogenated fats ஆரோக்கியமான மாற்றாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் உலக வனவிலங்கு நிதியம் (WWF) ஆகிய இரண்டும், ஒயில் ஃபாம் பொறுப்புடன் செய்கை செய்யப்படும்போது, உலகின் சமையல் எண்ணெய் தேவைகளுக்கு மிகவும் நிலையான மற்றும் விரிவாக்கக்கூடிய தீர்வாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளன. ஃபாம் ஒயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது, 2020 ஆம் ஆண்டில் 63 பில்லியன் இலங்கை ரூபாயை ஈட்டித் தந்த, இலாபம் ஈட்டக்கூடிய ஏற்றுமதித் தொழிலை பலவீனப்படுத்துவதாகும்.
தோட்டத் தொழிலுக்கான ஒரு நிலையான எதிர்காலம்
ஒயில் ஃபாம் செய்கையை மீண்டும் தொடங்குவது, இலங்கையின் இறக்குமதிச் செலவுகளை உடனடியாகக் குறைக்கலாம், உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கலாம் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மையின் சுமையின் கீழ் தத்தளிக்கும் தோட்டத் தொழிலின் இலாபத்தை மீட்டெடுக்கலாம். மேலும், இது தோட்டத் துறையை ஒரு நவீன, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட தொழிலாக அரசாங்கம் மீண்டும் நிலைநிறுத்த உதவும். இந்தத் துறை சிறு விவசாயிகளை ஆதரிக்கக்கூடியதாகவும், நிலையான தரங்களைத் தழுவிக்கொள்ளக் கூடியதாகவும், புதிய முதலீடுகளை ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கும்.
ஒயில் ஃபாம் மீதான தடையை நீக்குவது மற்றும் நிலையான தரநிலைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை தனது ஒயில் ஃபாம் துறையை மீட்டெடுக்க முடியும். அத்துடன், சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்தல், இறக்குமதி வரிவிதிப்பில் சீர்திருத்தம் செய்தல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டறியும் அமைப்புகளில் முதலீடு செய்தல் ஆகியவையும் அவசியம். இந்தியா ஏற்கனவே இந்தத் திசையில் உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒயில் ஃபாம் செய்கையை 45% விரிவுபடுத்தியுள்ளது. மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் 1.7 மில்லியன் ஹெக்டேயரை அடைவதற்கான லட்சியத் திட்டங்களுடனும் இந்தியா செயல்படுகிறது.
இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வலியுறுத்துவது போல், இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் எதிர்காலம் என்பது, முன்னோக்குச் சிந்தனை கொண்ட, ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்த கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் உள்ளது. மேலும், ஒயில் ஃபாம் செய்கையானது, இத்துறையின் நீண்டகால வளர்ச்சிக்கு சாத்தியமான மற்றும் நிலையான ஒரு மாற்றாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

