வடக்கு
ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

Nov 6, 2025 - 04:17 PM -

0

ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்பி எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார். 

மன்னாரில் காற்றாலைக்கு எதிராக தொடர்ச்சியாக சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று (05) 95 ஆவது நாளாகவும் போராட்டம் இடம்பெற்றது. 

இதன்போது போராட்டக்களத்தில் நேற்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி கடந்த 04 ஆம் திகதி மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்திருந்தார். அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். எதிர்வரும் காலத்தில் எவ்விதமான காற்றாலை திட்டங்களும் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படாது என்ற செய்தியை அமைச்சரவை ஊடாக தெரிவித்திருந்தார். 

எனினும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் 14 காற்றாலைக்கான வேளைத்திட்டங்கள் நிறுத்தப்படாது என்கின்ற விடையம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.எனவே இப்போராட்டக்களத்தில் இருந்து நாங்கள் கூறிக்கொள்வது எமது போராட்டம் நின்று விடாது. 

குறித்த 14 காற்றாலைகளும் அகற்றப்பட்டு, ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அதற்கான உத்தரவாதத்தினை வழங்குவதன் மூலமும், மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்வு இடம்பெறாது என்ற உத்தரவாதமும் வழங்கப்படுகின்ற போதே இப்போராட்டம் நிறுத்தப்படும். 

குறித்த போராட்டம் நூறாவது நாளை எட்டுகின்ற போது மாவட்டத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. கிராமங்கள் தோறும் தீப்பந்த போராட்டமும் முன்னெடுக்கப்படும். 

நாட்டுக்காகவும்,நாட்டு வளத்தை பாதுக்காப்பதும், மன்னார் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்படும். 

எமது போராட்டத்தின் ஊடாக எமது குரலுக்குச் செவிசாய்த்த ஜனாதிபதி அவர்களுக்கு போராட்டக்குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

எமது மூன்று கோரிக்கைகளையும் அவர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என நம்புகின்றோம். அவரது முடிவு கிடைக்கும் வரை இவ் போராட்டக்களத்தில் நாங்கள் காத்திருப்போம். 

எமது கோரிக்கைகளான மன்னார் தீவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 14 காற்றாலைகள் அகற்றப்பட வேண்டும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாலைகளால் மன்னார் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புக்களும் உடனடியாக நிவர்த்தி செய்கிற முயற்சியில் ஈடுபடுவதாக எமக்கு உத்தரவாதம் வழங்கி எழுத்து மூலம் எமக்கு வழங்க வேண்டும், மன்னார் மாவட்டத்தில் எவ்வித கணிய மணல் அகழ்விற்கும் அனுமதி வழங்க கூடாது. ஆகிய மூன்று கோரிக்கைகளையும் ஜனாதிபதி ஏற்றுக் கொள்வார் என நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05