Nov 7, 2025 - 11:09 AM -
0
ஜோன் கீல்ஸ் குழுமம், 2025 செப்டெம்பர் 30ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாட்டு பெறுபேறுகளில் பாரிய அதிகரிப்பைப் பதிவாக்கியுள்ளது. வட்டி, வரி, பெறுமானத்தேய்வு, மற்றும் மதிப்பிறக்கம் (EBITDA) ஆகியவற்றுக்கு முந்தைய வருமானமாக ரூபா 18.36 பில்லியனைப் பதிவாக்கியுள்ளதுடன், கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாக்கப்பட்ட ரூபா 8.09 பில்லியன் தொகையுடன் ஒப்பிடுகையில் இது 127% அதீத வளர்ச்சியாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2025/26 நிதியாண்டில் முதல் பாதியில் குழுமத்தின் திரட்டிய EBITDA ஆனது கடந்த ஆண்டிலிருந்து நடப்பு ஆண்டுக்கு என்ற அடிப்படையில் 98% அதிகரிப்புடன் ரூபா 31.33 பில்லியன் தொகையை எட்டியுள்ளது. பல்வேறு வணிகங்கள் மத்தியில் பண்டிகைக்கால வர்த்தகச் செயற்பாடுகள் இன்னும் அதிகரிக்கவுள்ள நிலையில், முதல் பாதியை விடவும், சிறப்பான பெறுபேறுகளை இரண்டாவது பாதியில் ஈட்ட முடியும் என குழுமம் எதிர்பார்க்கின்றது. 2024/25 முழு நிதியாண்டுக்கான தொடர்ச்சியாக கிடைத்த EBITDA ரூபா. 45.69 பில்லியனாக இருந்தது.
இலாபத்திறனும் குறிப்பிடத்தக்க அளவில் வலுப்பெற்றுள்ளது. இக்காலாண்டில், வரிக்கு முந்தைய இலாபமானது, (PBT) கடந்த ஆண்டில் இதே காலத்தில் பதிவாக்கப்பட்ட ரூபா 2.27 பில்லியனுடன் ஒப்பிடுகையில், 243% அதிகரிப்புடன் ரூபா 7.80 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) 176% ஆல் அதிகரித்து, ரூபா 4.20 பில்லியனாகப் பதிவாக்கப்பட்டுள்ளது. தாய்நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படக்கூடிய இலாபம் ரூபா 1.65 பில்லியன் (2024/25 2 வது காலாண்டு: ரூபா 1.37 பில்லியன்) ஆகக் காணப்பட்டது. City of Dreams Sri Lanka மற்றும் JKCG ஆகியவற்றின் பெறுபேறுகள் நீங்கலாக, பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படக்கூடிய இலாபம், கடந்த ஆண்டின் காலாண்டில் பதிவாக்கப்பட்ட ரூபா 692 மில்லியனுடன் ஒப்பிடுகையில், ரூபா 2.61 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது ஏனைய வர்த்தகத்துறைகள் மத்தியில் பரந்தளவிலான அடிப்படையில் வருமானம் உத்வேகத்துடன் வளர்ச்சி கண்டு வருவதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
இந்த வளர்ச்சியின் உத்வேகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வண்ணம், பங்கொன்றுக்கு ரூபா 0.10 என்ற முதலாவது இடைக்கால பங்குஇலாபத்தை பணிப்பாளர் சபை அறிவித்ததுள்ளதுடன், முன்னைய காலப்பகுதியில் அறிவிக்கப்பட்ட ரூபா 0.05 உடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகியுள்ளது. இத்தகைய உயர் தொகை விநியோகமானது, தற்போதைய செயல்பாட்டு உத்வேகத்தை, நிதியாண்டின் இரண்டாவது பாதியிலும் தக்க வைக்கவோ அல்லது மேம்படுத்தவோ முடியும் என்பதில் முகாமைத்துவத்தின் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கின்றது.
குழுமத்தினால் நிர்மாணிக்கப்பட்ட ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka செயற்திட்டத்தின் நட்சத்திர அந்தஸ்து கொண்ட கசினோ, அதியுயர் மட்ட Nuwa ஹோட்டல் மற்றும், உயர்தர வாழ்க்கைமுறையை இலக்காகக் கொண்ட கடைத்தொகுதி வர்த்தக மையம் ஆகியன திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது முழுமையாக இயங்க ஆரம்பித்துள்ளது. இச்செயற்த்திட்டம் தற்போது மூலதன முதலீட்டுக் கட்டத்தைத் தாண்டியுள்ளதால், இது குறித்த மேலதிக நிதிப்பாய்வுகள் எதுவும் தேவைப்படாது. இக்காலாண்டில், இலாப,நட்டமற்ற, சமநிலை கொண்ட EBITDA தொகையை இந்த ஆதனம் ஈட்டியுள்ளதுடன், ஹோட்டலில் தங்குவோரின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருவதாலும், மாநாடு மற்றும் நிகழ்வுகள் சார்ந்த வருமானம் வலுவாக அதிகரித்து வருவதாலும், 2025 ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வுக்காக ஏற்பட்ட ஒரு தடவை செலவுகளுக்கு மத்தியிலும் இந்த சமநிலை ஈட்டப்பட்டுள்ளது.
அனைத்து செயற்பாடுகளும் உத்வேகம் கண்டு வருவதாலும், தங்குவோரின் முற்பதிவுகள் அதிகரித்து வருகின்றமையாலும், மேற்குறிப்பிட்ட சமநிலையை அத்திவாரமாகக் கொண்டு ஆண்டின் இரண்டாவது பாதியில் வலுவான EBITDA மட்டத்தை ஈட்ட முடியுமென முகாமைத்துவம் எதிர்பார்க்கின்றது. Cinnamon Life கொண்டுள்ள தனித்துவமான மாநாட்டு மற்றும் நிகழ்வு ஏற்பாட்டு வசதிகள் உள்நாட்டிலும், சர்வதேசரீதியாகவும் தொடர்ந்தும் கணிசமான ஆர்வத்தை ஈர்த்து வருவதுடன், இந்த ஆதனத்தின் பிரமாண்டம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஏற்பாட்டு வசதிகள் காரணமாக, பல்வேறு சர்வதேச நிகழ்வுகள் குறிப்பாக கொழும்பைத் தெரிவு செய்து வருகின்றன. 2025 ஆகஸ்டில் ஆரம்பிக்கப்பட்ட கசினோ செயல்பாடுகளும் உத்வேகம் கண்டுள்ளதுடன், வருகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறையைப் பொறுத்தவரையில், மேற்கு கொள்கலன் முனையத்தின் (West Container Terminal - WCT-1), பெறுபேற்றுத்திறன், கணிசமான அளவில் எதிர்பார்ப்புக்களைத் தாண்டியுள்ளதுடன், திட்டமிட்டதை விடவும் அதிக செயல்திறனை காண்பித்து வருகின்றது. அது செயல்பட ஆரம்பித்து முழுமையாக ஒரு ஆண்டு நிறைவை எட்டியுள்ள நிலையில், 2025/26 நிதியாண்டில், வரிக்குப் பிந்தைய வருமான மட்டத்தில் (PAT), இலாப,நட்டமற்ற சமநிலையை நெருங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய உத்வேகத்தின் அடிப்படையில் கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தின் செயற்திட்ட நிறுவனமான WCT-1, எதிர்வரும் ஆண்டிலும், அதற்கு அப்பாலும் குழுமத்தின் இலாபங்களில் கணிசமான பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக மாறத் தலைப்பட்டுள்ளது. கீல்ஸ் சுப்பர்மார்க்கெட் நிறுவனத்தைப் பொறுத்தவரையில் வருகை தந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இக்காலாண்டில் 19% ஆல் அதிகரித்துள்ளதுடன், விரிவுபடுத்தப்பட்ட புத்தம்புதிய மற்றும் தயாரான உணவு வழங்கல்கள், நம்பிக்கை அங்கத்துவத் திட்டத்தின் மூலமாக மேம்படுத்தப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றின் உந்துசக்தியுடன், வலுவான விற்பனை மைய வளர்ச்சியையும் பிரதிபலிக்கச் செய்துள்ளது. இன்னும் பல்வேறு வாடிக்கையாளர்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த வளர்ச்சி வேகம் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
நிதியியல் சேவைகள் துறையைப் பொறுத்தவரையில், இலங்கையில் HSBC வங்கியின் தனிநபர் வங்கிச்சேவைப் பிரிவை கையகப்படுத்தும் உடன்படிக்கையை நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஏற்படுத்திக் கொண்டு, மூலோபாயரீதியாக விஸ்தரிக்கும் இலக்குடன் செயற்பட்டு வருவதுடன், ஒழுங்குமுறை அனுமதி கிடைக்கும் பட்சத்தில், 2026 ன் முதல் பாதியில் இந்த நடவடிக்கை முற்றுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யூனியன் அசூரன்ஸ் நிறுவனம், Fairfirst Insurance நிறுவனத்தில் கொண்டிருந்த 22% பங்குகளை Fairfax Asia க்கு விற்பனை செய்ததன் மூலமாக, இலங்கையில் மிகப் பாரிய வலையமைப்புக்களில் ஒன்றை இயக்கி வருகின்ற bancassurance வர்த்தகத்தின் மீதான கவனத்தை வலுவாக்கியுள்ளது.
நுகர்வோர் உணவுகள் துறையைப் பொறுத்தவரையில், 2025/26 ன் 2 வது காலாண்டில் ரூபா 1.71 பில்லியன் (முன்னைய ஆண்டிலிருந்து நடப்பு ஆண்டுக்கு 6% அதிகரிப்பு) EBITDA தொகையைப் பதிவாக்கியுள்ளதுடன், பான வகை வர்த்தகத்தின் வர்த்தக மட்டம் 12% ஆலும், தின்பண்ட வர்த்தக மட்டம் 14% ஆலும் அதிகரித்துள்ளது. எதிர்கால வளர்ச்சியை இலக்காகக் கொண்டு வர்த்தநாமத்தின் தெரிநிலையைக் கட்டியெழுப்புதல் மற்றும் வலையமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுக்கு உதவும் வகையில் விளம்பரப்படுத்தல், ஊக்குவிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் ஆகியவற்றுக்கான செலவுகள் அதிகரித்தமையின் காரணமாக இலாப மட்டம் சுருங்கியுள்ளது. பாரிய எண்ணிக்கையான வாகனங்கள் வாடிக்கையாளர்களுக்கு கையளிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து வலுவான காலாண்டை JKCG பதிவாக்கியுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்துடன் நடைபெறும் சர்ச்சையால் புதிய முன்பதிவுகள் பாதிக்கப்பட்டபோதிலும், 3,800-க்கும் மேற்பட்ட வாகனங்களின் ஒப்படைப்பு வரிசையை JKCG தக்க வைத்துள்ளது, இதனால் வரவிருக்கும் மாதங்களிலும் வளர்ச்சி தொடரும் நிலையில் உள்ளது.
குழுமத்தின் மத்தியில் EBITDA ஆனது பரந்தளவில் கணிசமாக அதிகரித்துள்ளமை, தேறிய பணப்புழக்கத்தை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது. தேறிய கடன்-பங்கு விகிதம் (Net Debt-to-Equity Ratio) 32% ஆகக் காணப்படுக்கின்றமை வலுவான நிதியியல் ஸ்தானத்தை எடுத்துக்காட்டுவதுடன், அதிகளவான பண வருவாயின் துணையுடன் 2025 மார்ச் 31 உடன் ஒப்படுகையில் தேறிய கடன்/EBITDA மேம்படும் என குழுமம் எதிர்பார்க்கின்றது. வலுவான கேள்விப் போக்குகள் மற்றும் அடிப்படை வளர்ச்சி, மேம்பட்ட செயல்பாட்டு அனுகூலம், மற்றும் சீரிய ஐந்தொகை முகாமைத்துவம் ஆகியவற்றுடன், 2025-26 நிதியாண்டின் பின் பாதி மற்றும் அதற்கு அப்பால் நிலைபேணத்தக்க வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றை வழங்குவதில் ஜோன் கீல்ஸ் குழுமம் மிகச் சிறப்பான ஸ்தானத்தில் உள்ளது.

