Dec 7, 2025 - 03:00 PM -
0
இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடனான தனது திருமணம் ரத்து செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு, பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான பலாஷ் முச்சல் என்பவருடன் கடந்த நவம்பர் 23ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்தது.
ஆனால், சில தனிப்பட்ட காரணங்களால் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இடையேயான திருமணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. அதற்கு பல்வேறு காரணங்களும் இணையத்தில் வலம் வந்தன.
இந்தச் சூழலில், நீண்ட காலம் மௌனம் காத்து வந்த ஸ்மிருதி மந்தனா தற்போது அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில வாரங்களாக எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஏராளமான ஊகங்கள் எழுந்தன.
எனவே, இந்த நேரத்தில் நான் வெளிப்படையாகப் பேசுவது முக்கியம் என்று நினைக்கிறேன். நான் அனைத்து விஷயங்களையும் பொதுவெளியில் பேசும் நபர் அல்ல, எனவே அதுகுறித்து எதுவும் சொல்லாமல் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.
இந்த விஷயத்தை இங்கேயே முடித்துவிடுகிறேன், நீங்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நேரத்தில் இரு குடும்பங்களின் தனியுரிமையையும் மதித்து, எங்கள் சொந்த விஷயத்தில் செயல்படவும் முன்னேறவும் இடமளியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நம்மை எல்லாம் இயக்கும் ஒரு உயர்ந்த நோக்கம் ஒன்று இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது என்னைப் பொருத்தவரையில், எப்போதும் நாட்டுக்காக விளையாடுவதுதான்.
முடிந்தவரை நீண்ட காலம் இந்தியாவுக்காக விளையாடி கோப்பைகளை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதில்தான் எனது கவனம் என்றென்றும் இருக்கும். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி.
முன்னேற வேண்டிய நேரம் இது" என அதில் குறிப்பிட்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார், அனைவரும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

