Dec 7, 2025 - 04:24 PM -
0
நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, மெராயா நகருக்கு அருகாமையில் வீதி உடைந்து சென்றதனால் அப்பகுதிக்கான பொதுப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது.
கடந்த 27 ஆம் திகதியிலிருந்து கனரக வாகனங்கள் எதுவும் இந்த வீதியினூடாகப் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், சேவையில் ஈடுபட்டிருந்த 11 பேருந்துகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனால், வைத்தியசாலைகளுக்குச் செல்பவர்கள் மற்றும் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் உட்படப் பலரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக தலவாக்கலை - மெராயா, தலவாக்கலை - எல்ஜின், நுவரெலியா - மெராயா, நுவரெலியா - டயகம உள்ளிட்ட பல வழித்தடங்களுக்கான சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதன் காரணமாக மெராயா, தங்கக்கலை, ஊவாகலை மற்றும் எல்ஜின் மேல் பிரிவு, கீழ் பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இப்பிரதேசத்தில் வாழும் இளைஞர்கள், முச்சக்கரவண்டிச் சாரதிகள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து, தற்காலிக நடவடிக்கையாக வீதியில் மணல் மூட்டைகளை அடுக்கிப் பாதுகாப்பு அரண் அமைத்து, கனரக வாகனங்கள் செல்வதற்கு வழிவகுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "வீதி உடைப்பெடுத்தமையால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். பொதுப் போக்குவரத்து இல்லாததால், அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற முச்சக்கரவண்டிகளுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் அதிகமானவர்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், இந்தத் தற்காலிக நடவடிக்கையை லிந்துலை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்தோம். எதிர்காலத்தில் அரசாங்கம் பாதிக்கப்பட்ட வீதிகளைச் சரியான முறையில் புனரமைக்க வேண்டும்," எனத் தெரிவித்தனர்.
--

