Dec 11, 2025 - 02:06 PM -
0
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் திகதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27ஆம் திகதி நடக்கிறது.
இந்நிலையில் வரும் 26 மற்றும் 27-ம் திகதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஒன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 மணிக்கு தொடங்குகிறது.
இதன்படி sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என்றும், டிச. 26ம் திகதி 30 ஆயிரம் பேருக்கும், 27-ம் திகதி 35 ஆயிரம் பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பாட் புக்கிங்கில் தலா 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மண்டல பூஜையின்போது, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 சவரன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவித்து மண்டல பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சபரிமலையில் 27ஆம் திகதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி தங்க அங்கி 23ஆம் திகதி காலை 7.00 மணிக்கு ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சபரிமலை நோக்கி புறப்படுகிறது.
அன்று இரவு ஓமல்லூரிலும், ஆம் திகதி இரவு கோண்ணியிலும், 25ஆம் திகதி பெரிநாட்டிலும் ஊர்வலம் தங்குகிறது. பின்னர் ஊர்வலம் 26ஆம் திகதி மதியம் பம்பை கணபதி கோவிலில் வந்து சேரும்.
அங்கிருந்து தங்க அங்கியை மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக சன்னிதானத்திற்கு கொண்டு செல்வார்கள். அன்று மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் அதனை 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக் கொள்வார்.
தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். இதையடுத்து அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11.00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு வரப்படுவதையொட்டி 26-ஆம் திகதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தங்க அங்கி அணிவித்து நடைபெறும் தீபாராதனைக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மறுநாள் 27ஆம் திகதி அதிகாலை 3.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை நடைபெறும். தொடர்ந்து 5.00 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு தங்க அங்கி அலங்காரத்துடன் ஜொலிக்கும் அய்யப்பனுக்கு மண்டல சிறப்பு பூஜை நடைபெறும். அன்று பகல் 1.00 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் மாலை 3.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் இரவு 11.00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு மகர விளக்கையொட்டி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு திறக்கப்படும். பிரசித்திப்பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் (ஜனவரி) 14 ஆம் திகதி நடக்கிறது.

