உலகம்
பந்து வீச்சில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

Dec 12, 2025 - 10:15 AM -

0

பந்து வீச்சில் மோசமான சாதனையை படைத்த அர்ஷ்தீப் சிங்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரு ஓவரை வீசி முடிக்க முடியாமல் திணறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் வீசிய மிக நீளமான ஓவர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார். 

நியூ சண்டிகரில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தனர். 

அப்போது 11-வது ஓவரை வீச வந்தார் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங். அந்த ஓவரில் அர்ஷ்தீப் சிங்கால் தனது லைன் மற்றும் லெந்த்தை (Line and Length) கட்டுப்படுத்தவே முடியவில்லை. 

தொடர்ந்து அகல பந்துகளை வீசிக்கொண்டே இருந்தார். அந்த ஒரு ஓவரில் மட்டும் அவர் மொத்தம் 7 அகல பந்துகளை வீசினார். 

இதனால், 6 பந்துகள் வீச வேண்டிய ஒரு ஓவரை முடிக்க, அவர் மொத்தம் 13 பந்துகளை வீச வேண்டியதாயிற்று. 

இந்த ஓவரில் மட்டும் அவர் 18 ஓட்டங்களை வாரி வழங்கினார்.சர்வதேச டி20 போட்டிகளில், ஒரு ஓவரில் அதிக பந்துகளை வீசிய இந்தியப் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனைக்கு அர்ஷ்தீப் சொந்தக்காரராகி உள்ளார். 

இதற்கு முன் கலீல் அகமது (இலங்கை அணிக்கு எதிராக) மற்றும் ஹர்திக் பாண்டியா (அவுஸ்திரேலியாவுக்கு எதிராக) ஆகியோர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியதே சாதனையாக இருந்தது. 

தற்போது அர்ஷ்தீப் சிங் 13 பந்துகளை வீசி அந்த மோசமான சாதனையை முறியடித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 13 பந்துகளை வீசியிருந்தார். தற்போது அர்ஷ்தீப் அவருடன் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். 

ஏற்கனவே 2024 டி20 உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக அர்ஷ்தீப் சிங் 10 பந்துகளை வீசியது குறிப்பிடத்தக்கது. 

நேற்றைய போட்டியில் அர்ஷ்தீப் 4 ஓவர்களில் 54 ஓட்டங்களை கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். 

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ