Dec 12, 2025 - 05:45 PM -
0
சென்னை முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை துணை நடிகையான ராஜேஸ்வரி (39), குடும்பத் தகராறு காரணமாக அதிக மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த நடிகை நீண்டகாலமாக தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு முற்றிய நிலையில், அவர் முத்தியால்பேட்டையில் உள்ள தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறி, சைதாப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்துள்ளார்.
தாயார் வீட்டிலிருந்தபடியே அவர் தொலைக்காட்சி நாடகப் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வந்துள்ளார். எனினும், கணவருடனான விரிசல் காரணமாகத் தொடர்ந்தும் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்த ராஜேஸ்வரி, நேற்று இரவு தனது தாயார் வீட்டில் வைத்து அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.
மயங்கிய நிலையில் காணப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

