Dec 12, 2025 - 06:29 PM -
0
People and Planet First Supporter என்ற அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள DFCC வங்கி, இந்த சர்வதேச ஸ்தானத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது வங்கியாகவும் மாறியுள்ளது. Good Market Sri Lanka ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரமானது, தமது பணியின் மையத்தில் சமூகம் மற்றும் சூழலியல் மதிப்பை நிலைநிறுத்துகின்ற தொழில்துறைகளுக்கு ஆதரவளிப்பதில் அதிகரித்து வரும் வங்கியின் வகிபாகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
பத்துடன் பதினொன்றாக நிலைபேற்றியலைக் கருதும் மனப்பாங்கினை விடுத்து, தான் கடனை வழங்குகின்ற, இடரை மதிப்பிடுகின்ற, மற்றும் தொழில்முயற்சியாண்மைக்கு ஆதரவளிக்கின்ற வழிமுறைகள் அனைத்திலும் வங்கி அதனை உட்புகுத்தியுள்ளது. நெறிமுறை சார்ந்த உற்பத்தி, சமூக நலன், நியாயபூர்வமான வாழ்வாதாரங்கள், சூழலைப் பேணும் பொறுப்புணர்வு, மற்றும் பொறுப்புணர்வுமிக்க வளர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கின்ற நிறுவனங்களுக்கான கடன் வசதிகளும் அவற்றுள் அடங்கியுள்ளன. அதனை நோக்கிய மாற்றத்தை இந்த அங்கீகாரம் பிரதிபலிப்பதுடன், வெறுமனே வணிக முயற்சிகளுக்கு கடன் வசதிகளை அளிப்பது மாத்திரமன்றி, அர்த்தமுள்ள வழிகளில் இலங்கையின் அபிவிருத்தியை வலுப்படுத்தும் வகையிலான வணிக முயற்சிகளுக்கும் வங்கி ஆதரவளித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது.
கடன் வசதிகளை வழங்குவதற்கும் அப்பால், நிதியியல் அறிவு, தொழில்முயற்சியாண்மை மேம்பாடு, மற்றும் மகத்தான மட்டத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் நீண்ட கால நெகிழ்திறன் ஆகியவற்றுடன் இயங்கும் நெறிமுறை சார்ந்த நிறுவனங்களுக்கு உதவும் துறை வாரியான ஆதரவு ஆகியவற்றுக்கும் DFCC வங்கி பங்களித்து வருகின்றது.
DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் கூறுகையில்:
“DFCC வங்கியைப் பொறுத்த வரையில் நிலைபேற்றியல் என்பது வெறும் வாய் வார்த்தையோ அல்லது தனியான ஒரு செயற்திட்டமோ கிடையாது. நிலைபேற்றியல் என்ற கண்ணாடியூடாகவே நாம் வங்கிச் சேவை மற்றும் தேசிய அபிவிருத்தியை அணுகுகின்றோம். People and Planet First Supporter என்ற அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளமை நெறிமுறை சார்ந்த, அனைவரையும் அரவணைக்கின்ற, மற்றும் சூழல் மீது பொறுப்புணர்வுள்ள வணிக நடைமுறைகளுக்கு முன்னின்று உழைக்கின்ற நிறுவனங்களுக்கு வலுவூட்டுவதில் எமது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்துவதாக உள்ளது. நன்மைக்கான சக்தியாக வர்த்தகத்தை பரிணமிக்கச் செய்யும் உலகளாவிய கூட்டாளர்கள் மற்றும் உள்நாட்டில் மாற்றத்திற்கு வித்திடுகின்றவர்களுடன் ஒரே மேடையில் நிற்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்.”
Good Market Sri Lanka ன் இணை ஸ்தாபகரும், மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அச்சலா சமரதிவாகர அவர்கள் கூறுகையில்:
“சமூக மற்றும் சூழல் மதிப்பைத் தோற்றுவிக்கின்ற நிறுவனங்களுக்கு நடைமுறை ரீதியான, அர்த்தமுள்ள ஆதரவை வழங்குகின்ற நிறுவனங்களை People and Planet First Supporter அங்கீகாரம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. நெறிமுறை சார்ந்த மற்றும் நிலைபேற்றியல் கொண்ட வணிகங்களுடன் DFCC வங்கி பேணி வருகின்ற ஈடுபாடு மிகவும் போற்றத்தக்கது என்பதுடன், பொறுப்புணர்வுமிக்க வழியில் கடனுதவிகளை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பு மென்மேலும் வளர்ந்து வருவதை இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கின்றது. மக்களுக்கும், பூமிக்கும் முன்னுரிமையளிக்கும் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவுகின்ற கூட்டாளர்களை Good Market ஆவலுடன் வரவேற்கின்றது.”
காலநிலையுடன் ஒன்றிய துறைகளுக்கு கடன் வசதியளித்தல், சூழல் மற்றும் சமூகம் சார்ந்த விடா முயற்சிகளை வலுப்படுத்தல், தனது செயல்பாடுகள் அனைத்திலும் பொறுப்புணர்வு மிக்க, அனைவரையும் அரவணைக்கின்ற வங்கிச்சேவை நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவை குறித்த DFCC வங்கியின் நீண்ட கால நிலைபேற்றியலை நோக்கிய பயணத்துடன் இந்த அங்கீகாரம் சிறப்பாக ஒன்றியுள்ளது. DFCC வங்கியைப் பொறுத்த வரையில் அது சம்பாதித்துள்ள இந்த நற்பெயர் வெறுமனே ஒரு அடையாளம் கிடையாது. இலங்கையில், அனைவருக்கும் நியாயபூர்வமான, சூழல்நேய, மற்றும் நெகிழ்திறன் கொண்ட பொருளாதாரத்தை வளர்க்கும் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற வங்கியின் தெளிவான நோக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது.
DFCC வங்கி குறித்த விபரங்கள்
1955 ம் ஆண்டில் நிறுவப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 முதல் கொழும்பு பங்குப் பரிவர்த்தனைச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் இயங்குவதுடன், Fitch Ratings இடமிருந்து A (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ள இவ்வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வாணிபக் கடன் தீர்வுகளுடன் சேர்த்து, தனிநபர், வர்த்தக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான விரிவான வங்கிச்சேவைகள் அனைத்தையும் வழங்கி வருகின்றது.
வாடிக்கையாளர்களை மையப்படுத்தியும் மற்றும் நிலைபேணத்தக்க புத்தாக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு, DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்கள், 133 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பிலுள்ள 6,000 க்கும் மேற்பட்ட ATM மையங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுபவத்தை DFCC வங்கி வழங்கி வருகின்றது. நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகளுக்கான கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகள் ஆகியவற்றுக்காக அங்கீகாரத்தைச் சம்பாதித்து, இவை தொடர்பில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகத் திகழ்ந்து வரும் DFCC வங்கி, சூழல் மீதான தாக்கங்களைக் குறைத்து, நீண்ட கால அடிப்படையில் பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது.

