Dec 13, 2025 - 11:21 AM -
0
ஆர்ஜென்டினா அணியின் தலைவரும், உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமுமான லியோனல் மெஸ்ஸி, தனது இந்திய விஜயத்தை ஆரம்பித்து இன்று (13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்தார்.
அதிகாலை 3 மணியளவில் கொல்கத்தா வந்தடைந்த அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அமோக வரவேற்பளித்தனர்.
இந்நிலையில், கொல்கத்தாவின் லேக்டவுன் (Lake Town) பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டுக் கழகத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 அடி உயரமான மெஸ்ஸியின் உருவச்சிலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உலகக் கிண்ணத்தைக் கையில் ஏந்தியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சிலையை மெஸ்ஸி காணொளித் தொழில்நுட்பம் ஊடாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பிரபல நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
மெஸ்ஸியின் வருகையை முன்னிட்டு 78,000 ஆசன வசதிகளைக் கொண்ட சால்ட்லேக் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டுகள் 7,000 இந்திய ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிகழ்வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சௌரவ் கங்குலி, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் மற்றும் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தீவிர ரசிகருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு இதேவேளை, மெஸ்ஸியின் தீவிர ரசிகரான ஷிப் ஷங்கர் பத்ரா என்பவரைச் சந்திக்கவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
56 வயதான இவர், தனது வீட்டை ஆர்ஜென்டினா கொடியின் நிறத்தில் வர்ணம் பூசியுள்ளதுடன், தான் நடத்திவரும் தேநீர் கடைக்கு 'ஆர்ஜென்டினா ரசிகர் மன்றம்' எனப் பெயரிட்டுள்ளார்.
தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மெஸ்ஸியை நேரில் காணும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.
எதிர்வரும் நிகழ்ச்சிகள் கொல்கத்தா விஜயத்தை முடித்துக்கொண்டு மெஸ்ஸி இன்று பிற்பகல் ஹைதராபாத் செல்லவுள்ளார். அங்கு இரவு நடைபெறும் காட்சிப் கால்பந்து போட்டியில் அவர் விளையாடவுள்ளார்.
நாளை மும்பை செல்லும் அவர், அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி டெல்லிக்குச் சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். மெஸ்ஸி தனது 3 நாள் இந்திய விஜயத்தில் மொத்தமாக 72 மணித்தியாலங்களைச் செலவிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

