உலகம்
தாய்லாந்து பாராளுமன்றம் கலைப்பு; தேர்தல் அறிவிப்பு

Dec 13, 2025 - 12:23 PM -

0

 தாய்லாந்து பாராளுமன்றம் கலைப்பு; தேர்தல் அறிவிப்பு

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தாய்லாந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

 

1907 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட சர்வதேச எல்லையில் அமைந்துள்ள 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து ஆலயம் தொடர்பான உரிமைப் பிரச்சினை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வருகின்றன. 

 

கடந்த ஜூலை மாதம் இந்த மோதல் தீவிரமடைந்ததில், இரு தரப்பையும் சேர்ந்த 48 வீரர்கள் உயிரிழந்ததுடன், சுமார் 3 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகினர். 

 

5 நாட்கள் நீடித்த இந்தப் போரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையிட்டுப் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தார். 

 

இதனைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் மாதம் மலேசியாவில் வைத்து இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 

எவ்வாறாயினும், கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கித் தமது நாட்டு வீரர் காயமடைந்ததாகக் குற்றம் சுமத்திய தாய்லாந்து, கடந்த நவம்பர் மாதம் குறித்த அமைதி ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதாக அறிவித்தது. 

 

இதனையடுத்து கடந்த 8 ஆம் திகதி எல்லையில் மீண்டும் இரு தரப்பு வீரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இதில் 8 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். புதிய எல்லை மோதல்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. 

 

இந்நிலையில், தாய்லாந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 45 முதல் 60 நாட்களுக்குள் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. 

 

தேர்தல் நடைபெறும் வரை பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையில் இடைக்கால அரசாங்கம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05