Dec 13, 2025 - 02:13 PM -
0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலைக்கு 1,200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலைக்கு நேற்று (12) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், வைத்தியசாலையின் சாதாரண சிகிச்சை சேவைகளை ஆரம்பிக்க சுமார் 1,200 மில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விடுதித் தொகுதியை கண்காணித்த அமைச்சர், அதனை அடுத்த வருடம் நவம்பர் மாதமளவில் நிறைவு செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
மேலும், அவசர விபத்து மற்றும் சிகிச்சை கட்டடத் தொகுதியை 2 வருட காலப்பகுதிக்குள் துரிதமாக நிர்மாணிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய, நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தி வைத்தியசாலையை முன்னைய நிலையை விட உயரிய நிலைக்கு கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.
சிலாபம் நகர மத்தியில் 7.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலை, புத்தளம் மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையாகும்.
ஆயிரத்திற்கும் அண்மித்த சுகாதார ஊழியர்களைக் கொண்ட இங்கு, கட்டில் கொள்ளளவு 645 இக்கும் அதிகமாகும்.

