Dec 16, 2025 - 11:35 AM -
0
ஓமேகாலைன் (Omega Line) நிறுவனமானது இலங்கையின் ஆடைத் துறைக்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, 2024/25 ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் விழாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நான்கு மடங்கு வெற்றியைப் பதிவு செய்து, நாட்டின் உயரிய ஏற்றுமதி கௌரவத்துடன் மேலும் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
ஒனிவேர்ஸ் [Oniverse] நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த உற்பத்தி நிறுவனமானது ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர் என்ற விருதினைப் பெற்றதுடன் மேலும் மூன்று பிரிவுகளில் வெற்றியடைந்துள்ளது. அவை: தயாரிப்பு பன்முகப்படுத்தலில் சிறந்த ஏற்றுமதியாளர், ஏற்றுமதி விநியோக சங்கிலிக்கு பிராந்தியங்களிலிருந்து சிறந்த பங்களிப்பாளர், மற்றும் சிறந்த ஏற்றுமதியாளர் – ஆடைத் துறை (பெரிய பிரிவு) ஆகியவையாகும். ஜனாதிபதியின் ஆதரவுடன் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் வழங்கப்படும் இந்த விருதுகள், நாட்டின் சிறந்த செயல்திறன் கொண்ட ஏற்றுமதியாளர்களை அங்கீகரிக்கின்றன.
“மனித திறனில் நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன்; ஓமேகா லைனில் எமது வெற்றியானது அதற்கான சான்றாகும்,” என ஓமேகா லைன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ தெரிவித்தார். “இந்த சாதனைகளின் பின்னணியில் உள்ள பிரதான செயற்பாட்டுச் சக்தியானது எமது மகிழ்ச்சியும் திருப்தியும் கொண்ட ஊழியர்களின் பலமாகும். இந்த அங்கீகாரமானது , எமது நிறுவனங்களிலேயே பணியாற்றும் 7,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிப்பதோடு, இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் ஒரு முக்கிய தூணாக ஓமேகா லைன் திகழ்வதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும், உலகத் தரத்திலான உற்பத்திக்கான எமது அர்ப்பணிப்பையும், உலக சந்தைகளில் இலங்கையின் நிலையை வலுப்படுத்தும் எமது பங்களிப்பையும் இது உறுதி செய்கிறது.”
1999 ஆம் ஆண்டு 30 ஊழியர்களுடன் ஒரே ஒரு உற்பத்தி நிறுவனமாக தொடங்கப்பட்ட ஓமேகா லைன் ஆனது , இன்று சண்டலங்காவா மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் உள்ள தனது செயல்பாடுகளின் மூலம் ஆண்டுதோறும் 100 மில்லியனுக்கும் அதிகமான ஆடைகளை உற்பத்தி செய்து, ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. Oniverse (முன்னர் Calzedonia) குழுமத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்கள், இலங்கையில் மொத்தமாக 450 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அத்துடன் வருடாந்த ஏற்றுமதியாக 200 மில்லியனுக்கும் அதிகமான அலகுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
நிறுவனத்தின் வவுனியா உற்பத்தி நிலையமானது , வட மாகாணத்தில் தனியார் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய முதலீடாக திகழ்கிறது. இதில் 2,900 பேர் பணியாற்றி வருவதுடன், பிராந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு ஓமேகா லைன் வழங்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதிபலிக்கிறது. வர்த்தகத் தலைநகரைத் தாண்டி ஏற்றுமதி விநியோக சங்கிலிக்கு வழங்கப்பட்ட இந்த தாக்கத்தை அங்கீகரிக்கும் வகையில், “ஏற்றுமதி விநியோக சங்கிலிக்கு பிராந்தியங்களிலிருந்து பங்களிப்பாளர்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
Calzedonia, Intimissimi, Tezenis, Falconeri உள்ளிட்ட முன்னணி ஐரோப்பிய வர்த்தகநாமங்களுக்காக ஓமேகா லைன் உற்பத்தி செய்கிறது. தற்போது Oniverse குழுமத்தின் 55 நாடுகளில் உள்ள 5,700 சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ஆடைகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை இலங்கையில் தயாரிக்கப்படுகின்றன. இது, இலங்கையின் உற்பத்தித் திறனில் Oniverse நிறுவனம் வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
செயல்திறன் சிறப்பு என்பதுஊழியர்கள் மேம்பாட்டுடன் பிரிக்க முடியாததாகும் என்பதே நிறுவனத்தின் நிலைப்பாடாகும். ஓமேகா லைனில் பணியாற்றும் ஊழியர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். இதனை ஆதரிக்கும் வகையில், விரிவான பயிற்சி திட்டங்கள், செயல்திறன் அடிப்படையிலான பதவி உயர்வு வாய்ப்புகள், மேலும் மருத்துவ வசதிகள், போக்குவரத்து சேவைகள் மற்றும் மானிய விலையில் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர் நலன்கள் வழங்கப்படுகின்றன.
ஓமேகா லைன் லிமிடெட், ஐரோப்பாவிற்கு இலங்கையிலிருந்து அதிக அளவில் ஆடைகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஆகும். இது இத்தாலியின் வெரோனா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, தொழிலதிபர் டொட். சாண்ட்ரோ வெரோனேசி நிறுவிய Oniverse (முன்னர் Calzedonia Group) குழுமத்தின் முழுமையான துணை நிறுவனமாக செயல்படுகிறது. சண்டலங்காவா மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் அமைந்துள்ள மூன்று முக்கிய உற்பத்தி நிலையங்கள் மூலம், உலக சந்தைகளுக்காக உள்ளாடைகள் மற்றும் நீச்சல் ஆடைகள் உற்பத்தியில் இந்த நிறுவனம் சிறப்பு பெற்றுள்ளது.
இலங்கையில் உள்ள இணை நிறுவனங்கள் மூலம் 15,000- க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட Oniverse குழுமத்தின் ஒரு பகுதியாக, ஓமேகா லைன் பல்வேறு மதிப்புமிக்க அங்கீகாரங்களை பெற்றுள்ளது. அவற்றில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் சிறந்த பெருநிறுவன பிரஜை விருது, CMO ஆசிய விருதுகள் , சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள் நிறுவன விருதுகள், மற்றும் Great Place to Work சான்றிதழ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், சிறந்த பணியிட நிறுவனங்கள் – முதல் 10 பட்டியலில் இடம்பெற்று, மொத்தமாகச் சிறந்த பணியிடம், பெற்றோருக்குச் சிறந்த பணியிடம், பெண்களுக்குச் சிறந்த பணியிடம், மற்றும் உற்பத்தித் துறையில் சிறந்த நிறுவனம் போன்ற பிரிவுகளிலும் உயரிய இடங்களைப் பெற்றுள்ளது.

