Dec 16, 2025 - 03:28 PM -
0
நாளை ஆரம்பமாகவுள்ள WealthTrust Securities Limited (WTS) நிறுவனத்தின் ஆரம்ப பொதுப்பங்கு வழங்கல் நடவடிக்கையின் மூலமாக பங்கொன்று ரூபா 7.00 என்ற விலைமதிப்பில் வழங்கப்படவுள்ள 71,548,244 சாதாரன, வாக்குரிமை கொண்ட பங்குகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது. இந்த வழங்கல் நடவடிக்கை மூலமாக ரூபா 500,837,708 தொகையைத் திரட்ட முடியும் என WTS எதிர்பார்ப்பதுடன், கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி சபையில் நிறுவனத்தின் பங்குகள் நிரற்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை வணிகராகவும், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடமிருந்து அனுமதி உரிமம் பெற்ற பங்குத் தரகர் (கடன்) மற்றும் பங்கு வணிகர் (கடன்) ஆகவும் WTS இயங்கி வருகின்றது. ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் மூலமாக திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் பிரதான மூலதன காப்பினை மேலும் வலுப்படுத்தி, அரசாங்க பிணைப் பத்திரங்களில் அதன் முதலீட்டு மற்றும் வணிகத் துறையை விரிவுபடுத்த உதவி, நிலைபேணத்தக்க மதிப்பைத் தோற்றுவிக்கும் அதேசமயம், சந்தை மற்றும் வட்டி வீத இடரை நிர்வகிக்கும் ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த பங்கு வழங்கல் நடவடிக்கையின் முகாமையாளராகவும், நிதியியல் ஆலோசகராகவும் செயற்படும் Asia Securities Advisors (Private) Limited இதனை நிர்வகிக்கின்றது. தகவல் விபர தொகுப்பில் குறிப்பிடப்பட்ட மதிப்பீட்டு தர ஒப்பீட்டின் அடிப்படையில் தள்ளுபடி விலையில் இது வழங்கப்படுவதுடன், சிறப்பான ஸ்தானத்திலுள்ள மூலதன சந்தை நிரற்படுத்தல்களின் போது வழக்கமாகக் காணப்படும் பரந்த அடிப்படையிலான ஆர்வத்தின் மத்தியில், முதலீட்டாளர்களாக மாறவுள்ளவர்கள் மத்தியில் நேர்மறை எண்ணப்பாடு மற்றும் வலுவான எதிர்பார்ப்புடன் தனது வழங்கல் நடவடிக்கையின் ஆரம்ப தினத்தில் WTS கால்பதிக்கிறது.

