Dec 16, 2025 - 03:30 PM -
0
WealthTrust Securities Limited (WTS) நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கின்ற நிலையில், இலங்கையின் மூலதனச் சந்தை வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்களை இத்தருணத்தில் தவற விடாது கைப்பற்றிக் கொள்ள விரும்புகின்ற முதலீட்டாளர்களின் ஆர்வத்துடன், சந்தையில் பலத்த எதிர்பார்ப்பைத் தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற முதன்மை வணிகராகவும், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடமிருந்து பங்கு தரகராகவும் (கடன்) மற்றும் பங்கு வணிகராகவும் (கடன்) அனுமதி உரிமத்தையும் பெற்றுள்ள WTS, வெளிப்படைத்தன்மை கொண்ட, ஒழுங்குமுறைக்கு உட்பட்ட, மற்றும் தொழில்ரீதியாக சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்ற நிதிச் சேவைகள் தளங்கள் மீது கூரிய கவனம் செலுத்தியுள்ள ஒரு தருணத்தில் பங்குச் சந்தையில் காலடியெடுத்து வைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ரூபா 500,837,708 தொகையைத் திரட்டி, கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி பலகையில் நிரற்படுத்துவதற்கு நிறுவனம் எதிர்பார்த்துள்ள நிலையில் (உரிய விதிமுறைகள் மற்றும் பணிப்புரைகளுக்கு அமைவானது), பங்கொன்று ரூபா 7.00 என்ற வழங்கல் விலையில், மொத்தமாக 71,548,244 சாதாரண, வாக்குரிமை கொண்ட பங்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
வழங்கல் நடவடிக்கை இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், தகவல் விபர விதிமுறைகளுக்கு இணங்க. வழங்கப்படும் பங்குகளின் எண்ணிக்கையை விடவும் கூடுதலான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று வழங்கல் நடவடிக்கையை பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலை எழுந்தாலன்றி, பதின்நான்கு (14) சந்தை நாட்களுக்கு (ஆரம்ப தினம் அடங்கலாக), நிறைவடையும் தினத்தில் மாலை 4.30 மணி வரை வழங்கல் நடவடிக்கை இடம்பெறும். நிறுவனத்தின் பிரதான மூலதனத்தை வலுப்படுத்துவதே இவ்வழங்கல் நடவடிக்கையின் அடிப்படை நோக்கமென WTS குறிப்பிட்டுள்ளது.
முதன்மை வணிகர்களின் குறைந்தபட்ச பிரதான மூலதன தேவைப்பாடுகள் 2026 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூபா 4.0 பில்லியனாகவும், 2027 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூபா 5.0 பில்லியனாகவும் இருக்க வேண்டுமென கட்டங்களாக அதனை அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி பணிப்புரை விடுத்துள்ளதை இந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தளம்பல் நிலை கொண்ட வட்டி வீத நிலைமைகளின் கீழ், நெகிழ்திறனை வலுப்படுத்தும் நோக்குடனேயே இந்த மூலதன காப்பு வலுப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தகவல் விபரத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டவாறு, 40% தனிநபர் முதலீட்டாளர்களுக்கும், 10% அலகு நிதியங்களுக்கும், 10% ஊழியர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கும், மற்றும் 40% தனிநபர் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுகின்ற ஒரு முதலீட்டாளர்கள் ஒதுக்கீட்டுக் கட்டமைப்புடன் இவ்வழங்கல் நடவடிக்கை ஆரம்பிக்கின்றது.
குறைந்தபட்ச விண்ணப்பம் 100 பங்குகளாக (ரூபா 700) அமைதல் வேண்டும் என்பதுடன், 100 பங்குகளின் மடங்கு என்ற குறைந்தபட்ச தேவைப்பாட்டின் அடிப்படையில் அதற்கு மேலான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
2010 ம் ஆண்டில் நிறுவப்பட்ட WTS நிறுவனம், Lanka Rating Agency வழங்கியுள்ள A- (Positive) என்ற நிறுவன கடன் தர மதிப்பீட்டுடன் சந்தையில் காலடியெடுத்து வைப்பதுடன், நிறுவனத்தின் சாதாரண, வாக்குரிமை கொண்ட பங்குகளை திரி சவி பலகையில் நிரற்படுத்துவதற்கான விண்ணப்பத்தை கொள்கை அளவில் கொழும்பு பங்குச் சந்தை அங்கீகாரமளித்துள்ளது.
ஒட்டுமொத்தத்தில் இன்று ஆரம்பிக்கின்ற WealthTrust Securities ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கையானது நிறுவனத்தின் முன்மொழிவின் மீதான நம்பிக்கை மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் நம்பகமான, வளர்ச்சியை மையமாகக் கொண்ட நிரற்படுத்தல்களின் பரந்த உத்வேகம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், பலத்த ஆர்வத்தை ஈர்க்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

