Dec 17, 2025 - 01:16 PM -
0
டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் மீண்டும் பயன்பாட்டுக்குரிய நிலையில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விசேட கலந்துரையாடல் நேற்று (16) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், டித்வா புயல் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த வீதிகளுக்கு விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ள வேண்டிய திருத்தம் மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக குஞ்சுகுளம் வீதி,முள்ளிக்குளம் – பள்ளமடு வீதி,பரப்புக்கடந்தான் வீதி ஆகிய வீதிகளுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த வீதிகள் தொடர்பில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள வீதிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பிலுள்ள வீதிகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் கீழ் பராமரிக்கப்படும் வீதிகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள், அடுத்த ஆண்டில் முன்னெடுக்க திட்டமிடப்பட்ட புதிய வீதி திட்டங்கள், அவற்றுக்கான தேவையான நிதி ஒதுக்கீடுகள், பணிகள் ஆரம்பிக்க வேண்டிய காலக்கெடுகள் மற்றும் செயல்படுத்தும் அதிகாரப்பூர்வ நிறுவனங்கள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடலில் இடம்பெற்றன.
இவ் விசேட கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர், மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
--

