Dec 18, 2025 - 02:14 PM -
0
தெஹிவளை, வனரதன வீதிப் பகுதியில் கடந்த 6ஆம் திகதி போதைப்பொருள் வர்த்தகரான அமின்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளின் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், சமந்த பெரேரா எனும் போதைப்பொருள் வர்த்தகரின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான சுதத் சந்தன என்கிற 'முட்டியா' எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
'படோவிட்ட அசங்க' எனும் குற்றவாளியைப் பழிவாங்குவதற்காக, இந்தக் கொலையைச் சமந்த பெரேரா எனும் குற்றவாளியே வழிநடத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, இக்கொலையின் துப்பாக்கிதாரிகளில் ஒருவராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் 52 வயதுடைய சுதத் சந்தன (முட்டியா), நேற்று பிற்பகல் பில்லாவ பகுதியில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர 16 தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கியையும் பொலிஸார் பெல்லன்வில பகுதியில் மீட்டுள்ளனர்.
சமந்த என்பவருடன் உள்ள நட்பு காரணமாகவே இக்கொலையைச் செய்ததாகவும், அதற்காக அவர் தனக்கு ஒரு இலட்சம் ரூபாய் பணம் வழங்கியதாகவும் சந்தேக நபர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், இக்கொலையுடன் தொடர்புடைய மற்றைய துப்பாக்கிதாரியை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

