Dec 18, 2025 - 02:16 PM -
0
புது டெல்லியில் உள்ள மால்டா உயர்ஸ்தானிகராலயமும், அரசாங்கங்கள் மற்றும் பிரஜைகளுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கான நம்பகமான தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் சர்வதேச முன்னணி நிறுவனமான VFS குளோபலும் ஒன்றிணைந்து மால்டாவிற்கான விசா விண்ணப்ப மையத்தை கொழும்பில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளன.
டிசம்பர் 3, 2025 அன்று, இந்தியா, மாலைதீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கான மால்டாவின் உயர்ஸ்தானிகரும், நேபாளத்திற்கான மால்டாவின் தூதுவருமான மாண்புமிகு “திரு. ரூபன் கௌசி” மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான VFS குளோபல் நிறுவனத்தின் நாட்டு முகாமையாளர் “திரு. மன்பிரீட் சிங் அரோரா” ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட இவ் மையமானது பெப்ரவரி 1, 2026 முதல் அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தப் புதிய வசதி ஊடாக மால்டாவுக்கு பயணிக்கும் இலங்கை பிரஜைகள் கொழும்பில் தங்கள் ஷெங்கன் விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதனை தொடர்ந்து விசா விண்ணப்பங்களின் மதிப்பீட்டை புது டெல்லியில் உள்ள மால்டா உயர்ஸ்தானிகராலயம் மேற்கொள்ளும்.
இலங்கையில் VFS குளோபல் ஒரு பரந்த, மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்ட இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கொழும்பு 09, Dr டனிஸ்டர் டி சில்வா மாவத்தையில் இல. 675இல் அமைந்துள்ள 80,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இப் புதிய மையம் நவீன வசதிகளை கொண்டிருப்பதுடன் எளிதில் அணுகக்கூடியதாகவும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தையும் வழங்குகிறது.
நன்கு பயிற்சிபெற்ற வாடிக்கையாளர் சேவை ஊழியர்களின் ஆதரவுடன் இயங்கும் இவ் விசாலமான வளாகம், விசா விண்ணப்ப செயல்முறை முழுவதும் விண்ணப்பதாரர்களுக்கு தடையற்ற, சௌகரியமான சூழலை வழங்கும். இந்தியா, மாலைதீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கான மால்டாவின் உயர்ஸ்தானிகரும், நேபாளத்திற்கான மால்டாவின் தூதுவருமான மாண்புமிகு “திரு. ரூபன் கௌசி” கூறுகையில், “வேலை, கல்வி மற்றும் ஓய்வுக்காக மால்டாவுக்கு பயணிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பை நாங்கள் கண்டுள்ளோம். கொழும்பில் மால்டா விசா விண்ணப்ப மையத்தை திறப்பதன் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அதிக வசதியையும் மேம்பட்ட அணுகலையும் வழங்க முடியும். விசா சேவைகள் வினைத்திறன் மிக்கதாகவும் சிறந்த தரத்திலும் வழங்கப்படுவதை உறுதி செய்யும் VFS குளோபலின் தொடர்ச்சியான பங்களிப்பிற்கும் அவர்களின் தொழில்முறை அணுகுமுறைக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
தெற்காசிய VFS குளோபலின் பிரதம தொழிற்பாட்டு அதிகாரி திருமதி “யும்மி தல்வார்” இது குறித்து கருத்து தெரிவிக்கையில், 2008 முதல் மால்டாவுடனான எங்கள் நீண்டகால இணைவானது மால்டா அரசாங்கத்துடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளும் ஆழமான நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. கொழும்பில் எங்கள் விரிவாக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட மையம் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் மால்டாவிற்கு வரும் இலங்கைப் பயணிகள் அதிநவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட வசதிகள் ஊடாக பயனடைவார்கள். நன்கு பயிற்சிபெற்ற ஊழியர்களின் ஆதரவுடன் மால்டா அரசாங்கத்தின் சார்பாக தடையற்ற, வினைத்திறனான மற்றும் நம்பகமான விண்ணப்ப அனுபவத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.” என்றார்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் ஒட்டுமொத்த விசா விண்ணப்ப சமர்ப்பிப்பு அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு விருப்பத் தெரிவுகள் மற்றும் மேலதிக சேவைகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். இம் மேலதிக சேவைகளை தேர்ந்தெடுப்பது விசா விண்ணப்பங்களின் கால எல்லை அல்லது முடிவில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2008ஆம் ஆண்டு முதல் விசா செயலாக்க சேவைகளில் மால்டா அரசாங்கத்தின் நம்பகமான பங்காளராக VFS குளோபல் இருந்து வருகிறது. இந் நிறுவனம் மால்டா அரசாங்கத்தின் சார்பாக சர்வதேச ரீதியாக 215 பிரத்தியேக விசா விண்ணப்ப மையங்களின் வலையமைப்பு ஊடாக 71 நாடுகளில் விசா சேவைகளை வழங்குகிறது. இலங்கையில் VFS குளோபல் 24 வாடிக்கையாளர் அரசாங்கங்களுக்கு நம்பகமான பங்காளராக உள்ளது.
விசா விண்ணப்ப செயல்பாட்டில் VFS குளோபலின் பங்கு முன்நிலை நிர்வாக செயற்பாடுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் விசா விண்ணப்ப படிவங்களை சேகரித்தல், சரிபார்ப்புப் பட்டியலின்படி தேவையான ஆவணங்களின் சேகரிப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸைப் பதிவு செய்தல் ஆகியவை உள்ளடங்கும். விசா வழங்குவது அல்லது மறுப்பது தொடர்பான முடிவெடுக்கும் செயல்பாட்டில் VFS குளோபல் எவ்விதப் பங்கையும் வகிப்பதில்லை. ஷெங்கன் ஒருங்கிணைப்பு அமைப்பின் கீழ், விசா வழங்கல் அல்லது மறுப்பு தொடர்பான தீர்மானங்கள் அனைத்திற்குமான முழுப் பொறுப்பும் தூதரகத்தை சார்ந்தது ஆகும்.
VFS குளோபல் தொடர்பாக
நம்பகமான தொழில்நுட்ப சேவைகளில் சர்வதேச தலைவராக VFS குளோபல் ஆனது அரசாங்கங்கள் மற்றும் பிரஜைகளுக்கு பாதுகாப்பான பயணங்களை மேம்படுத்தும் வகையில் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் தூதரகங்களின் பணிகளை ஆதரிக்க Generative AI உள்ளிட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பயன்படுத்துகிறது. நிறுவனம் தனது வாடிக்கையாளர் அரசாங்கங்களுக்கான விசா விண்ணப்பங்கள், கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகள் தொடர்பான தீர்மானங்கள் அற்ற, நிர்வாகப் பணிகளை நிர்வகிக்கிறது. இது வினைத்திறனை அதிகரிப்பதுடன் முக்கியமான பணிகளில் முழுமையான கவனத்தை செலுத்த அரசாங்கங்களுக்கு உதவுகிறது.
தொழில்நுட்ப மேம்பாடு, ஏற்றுக் கொள்ளல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கான பொறுப்பான அணுகுமுறையுடன் நிறுவனம் ஆனது நெறிமுறையான நடைமுறைகள் மற்றும் நிலைபேறாண்மைக்கு முன்னுரிமை அளித்து 69 வாடிக்கையாளர் அரசாங்கங்களுக்கு நம்பகமான பங்காளராக சேவை செய்கின்றது. அதே வேளையில், 165 நாடுகளில் 3,900க்கும் மேற்பட்ட விண்ணப்ப மையங்களை இயக்கும் VFS குளோபல், 2001 முதல் 514 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை* செயற்படுத்தியுள்ளது.
சூரிச் மற்றும் துபாயை தலைமையகங்களாகக் கொண்டுள்ள இந்நிறுவனம், Blackstone Inc ஆல் நிர்வகிக்கப்படும் முதலீட்டு நிதிகளின் மூலம் பெரும்பங்கு உரிமை பெற்றுள்ளதுடன் சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட Kuoni மற்றும் Hugentobler அறக்கட்டளை உள்ளிட்ட சிறுபான்மை பங்குதாரர்களையும் கொண்டுள்ளது.
*இதில் VFS குளோபல் மூலமான 325 மில்லியன் பரிவர்த்தனைகளும் CiX Citizen Experience மூலமான 189 மில்லியன் பரிவர்த்தனைகளும் அடங்கும்.

