கிழக்கு
முறையற்ற நியமனங்களுக்கு எதிராக அடையாள பணிபுறக்கணிப்பு!

Dec 18, 2025 - 06:10 PM -

0

முறையற்ற நியமனங்களுக்கு எதிராக அடையாள பணிபுறக்கணிப்பு!

கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் உரிய எண்ணிக்கைக்கு மாறாகவும் முறையற்ற வகையிலும் வழங்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கத்தினால் இன்று (18) அடையாள பணிபுறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் முத்துக்குமார் சுகிர்தன் தெரிவித்தார். 

இன்று பிற்பகல் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை அவர் தெரிவித்தார். 

இதன்போது கருத்து தெரிவித்த அவர், 

இன்று நாங்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வேலை நிறுத்தபோராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான விளக்கம் அளிப்பதற்காக ஊடக சந்திப்பினை நடத்துகின்றோம். 

கடந்த காலங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முறைகேடான நியமிப்புகள் மற்றும் கவுன்சிலில் தவறான விடயங்கள் தொடர்பில் தெரிவிக்க வந்துள்ளோம். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அதியுச்ச நிர்வாகக் கட்டமைப்பான கவுன்சலிலே உரிய எண்ணிக்கைக்கு மாறாக அதில் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

அதில் இரண்டு பீடங்களின் பீடாதிபதிகள் எந்தவித இடைவெளிகள் இல்லாமல் நியமிக்கப்பட்டிருந்தனர். அப்படி இருந்தும் ஒருவர் அதிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். மற்றைய பீடாதிபதி தொடர்ந்தும் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இது எமது கவுன்சிலின் எண்ணிக்கையைப் பாதிக்கின்ற வகையிலே இருக்கின்றது. 

அதே நேரம், பல்கலைக்கழக பதிவிகள் ஒன்றிலும் இல்லாத ஒருவர் பேராசிரியர் என்ற பட்டத்தைப் பயன்படுத்த முடியாது. அவ்வாறு இருந்தும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நியமிக்கப்பட்டவரின் பெயரை பேராசிரியர் என்று குறிப்பிட்டு அவருக்கான நியமனத்தை வழங்கியிருந்தது. அவருக்கு பேராசிரியர் என்ற பட்டத்தை வைத்தே சகல கடிதங்களும் அனுப்பப்படுகின்றன. இது அனைத்து பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் அவமதிக்கின்ற செயற்பாடாகவே காணப்படுகின்றது. 

இவ்வாறான தவறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்பதற்காக நாங்க எமது கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமும் தெரியப்படுத்தி இருந்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த விடயம் தொடர்பில் நாங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரையும் சந்தித்தும் கலந்துரையாடியிருந்தோம். அவரும் இதனை ஏற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

அத்துடன் அண்மைக் காலமாக புதியதொரு சட்டத் திருத்தமோன்று போடப்பட்டிருந்தது அதில் எமது பீடாதிபதிகளின் நியமனங்கள், நிறுவனத் தலைவர்கள் தெரிவு சம்மந்தமாகத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அது இன்னும் பாராளுமன்றத்திலே அங்கீகரிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் பல்கலைக் கழகத்திலே பலகலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடிதமொன்று அனுப்பி இருந்தார், குறித்த திருத்தம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும் வரை எவ்வித நியமனங்களும் வழங்கப்படக் கூடாது என்று. இது உண்மையிலேயே சட்ட நடைமுறையற்ற கடிதம். இதனைப் பயன்படுத்தி பல்கலைக் கழகத்தில் பீடாதிபதிகள், நிறுவனத் தலைவர்கள் நியமனங்கள் வழங்கப்படவில்லை. 

இந்த சட்ட ரீதியற்ற கடிதத்தினைத் திரும்பப் பெறுமாறு கேட்டு நாங்கள் கடிதம் அனுப்பி இருந்தோம். ஆனால் அதற்கும் எவ்வித பதிலும் இல்லை. 

இவ்வாறான தவறான விடயங்களைச் செய்து கொண்டிருக்கின்ற பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக பொறுத்தது போது என்ற ரீதியில் இன்றைய தினம் அடையாள வேலை நிறுத்தத்தைத் தொடங்கியிருக்கின்றோம். இதற்கும் ஒரு சரியான முடிவு கிடைக்காதவிடத்து எமது ஆசிரியர் சங்கம் கூடி மீண்டும் என்ன செய்யலாம் என்பது குறித்து தீர்மானிப்போம் என்று தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05