Dec 21, 2025 - 06:51 AM -
0
கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) யாழ்ப்பாணம், திம்புல-பத்தனை மற்றும் திஸ்ஸமகாராம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
ஹட்டன் - நுவரெலியா வீதியில் பத்தனை சந்திக்கு அருகில் லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் மீது மோதியதுடன், இழுத்துச் செல்லப்பட்டு இரண்டு பாதசாரிகள் மீதும் மோதியதில் விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரிகள் இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஒரு பாதசாரி உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய பாதசாரி மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் லிந்துலை மற்றும் பத்தனை பிரதேசங்களில் வசித்த 21 மற்றும் 60 வயதுடைய இருவர் ஆவர். விபத்து தொடர்பில் லொறி மற்றும் பஸ் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை வீதியின் பொம்மாவெளி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் (டிராக்டர்) மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும், பின்னால் அமர்ந்து பயணித்தவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, பின்னால் அமர்ந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவராவார்.
இதேவேளை, திஸ்ஸமகாராம - தெபரவெவ வீதியின் மெதவெலன பகுதியில் பஸ் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவருடன் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திஸ்ஸமகாராம பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய நபராவார்.

