Dec 23, 2025 - 04:34 PM -
0
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (23) அலரி மாளிகையில் நடைபெற்றது.
ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மீளமைத்தல் மற்றும் நாட்டின் விவசாயத்துறையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இச்சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.
வலுவான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நிறுவன கட்டமைப்புகள் மூலம் அனர்த்த நிலைமைகளுக்குப் பதிலளிப்பதற்கான பயனுள்ள முறைமைகளை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் இங்கு வலியுறுத்தினார்.
முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரணப் பணிகள், அனர்த்தங்களுக்குப் பதிலளித்தல் மற்றும் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றிற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, 'டித்வா' புயலால் ஏற்பட்ட அழிவின் பின்னர் நாட்டை மீட்டெடுக்கும் செயன்முறையில், நிவாரணப் பணிகளுக்கு மேலதிகமாக மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் போன்ற நீண்டகால நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இந்திய அரசாங்கம் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டினார்.
நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டின் ஒரு கட்டமாக, நெருக்கமான கண்காணிப்புடன் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்த அவசர அனர்த்த நிலைமையின் போது மக்கள் வழங்கிய தன்னார்வப் பங்களிப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகள் குறித்துச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், இடர் குறைப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

